ஜனாதிபதி - பிரதமருக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் இடமில்லை..! பெயர் குறிப்பிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டவட்ட அறிவிப்பு..!
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலகும்வரை ஒரு கட்டிடத்திலிருந்து கூட வெளியேறமாட்டோம். பிணத்தை கழுகு பார்ப்பதுபோல் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்து அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் குழுக்களுக்கும் இடமில்லை. என காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியிருக்கின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வசந்த முதலிகே இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அவரவர் பதவிகளிலிருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆனால் அவர்கள் பதவி விலகுவதற்கு கால அவகாசம் கோரியுள்ளனர். மக்களின் எதிர்ப்பினையும் மீறி ஏதேனுமொரு வகையில் பதவியில் நீடிப்பதற்கு கோட்டாபய ராஜபக்ஷ முற்படுவாராயின் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.
ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகல் கடிதத்தினை ஒப்படைக்கும் வரை மக்கள் ஆக்கிரமித்துள்ள எந்தவொரு கட்டத்திலிருந்தும் வெளியேறப்போவதில்லை. கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ரணில் விக்கிரமசிங்க 5 நாட்களேனும் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு முயற்சித்தால் அதற்கும் நாம் இடமளிக்கப் போவதில்லை.
அதே போன்று மக்களை ஏமாற்றும் சர்வகட்சி அரசாங்கத்தையும் நாம் ஏற்கப் போவதில்லை. மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தீர்வு திட்டங்களை நாம் ஏற்கனவே முன்வைத்துள்ளோம். அதன்படி செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
பிணத்தை கழுகு பார்ப்பதுபோல் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்து அதன் ஊடாக ஆட்சியை பிடிக்க சில குழுக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாங்கள் அதற்காக போராடவில்லை. மக்கள் உயிர் தியாகங்களை செய்யவில்லை.
மேலும் உதய கம்மன்பில, விமல் வீரவங்ச, அத்துரலிய போன்ற சந்தர்ப்பவாதிகள் ராஜபக்ஸக்களை இத்தனை காலம் பாதுகாத்தவர்கள். அவர்கள் இனினும் ஆதரவளிக்க நினைத்தால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை கூறமுடியாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.