கோட்டா வீட்டுக்கு போ-கல்முனையில் இரு வேறு போராட்டங்கள் முன்னெடுப்பு
கோட்டா வீட்டுக்கு போ-கல்முனையில் இரு வேறு போராட்டங்கள் முன்னெடுப்பு
கோட்டா வீட்டுக்கு போ எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தில் இரு வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
இன்று இம்மாவட்டத்தின் மாளிகைக்காடு சந்தி பகுதியில் இருந்து கல்முனை நகர் வரையிலான துவிச்சக்கரவண்டி ஊடாக பயணம் செய்து கோட்டா கோ ஹோம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டமானது தேசிய மக்கள் சக்தியின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.ஆதம்பாவா தலைமையில் பொதுமக்கள் பலரும் ஒன்றிணைந்து முன்னெடுத்ததுடன் கல்முனை வரை போராட்டம் ஊர்வலமாக துவிச்சக்கரவண்டியில் சென்று முடிவடைந்தது.
இதன் போது துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்த போராட்டக்காரர்கள் எண்ணெய் இல்லை சமையலுக்கு கேஸ் இல்லை சமையலுக்கு, கோட்ட ரணில் - நல்ல துக்கம் நல்ல துக்கம் ரணில் கோட்டா, கோட்டா ரணில் வீட்டுக்குப் போ , கோட்டா ரணில் - சோடி வேண்டாம் ,மீனும் இல்லை வலையும் இல்லை, டீசல் இல்லை - கல்வியும் இல்லை பெற்றோல் இல்லை , வாழ்க்கை செலவு வான் அளவு தொழில் இல்லை, கொள்ளையிட்ட டொலர் இல்லை, என கோஷம் எழுப்பினர்.
இதே வேளை மற்றுமொரு கோட்டா கோ ஹோம் எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி கல்முனைத் தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றசாக் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது நாட்டின் பெரிய தேசியக்கொடி ஒன்றினை ஏந்தி சென்ற போராட்டக்காரர்கள் சாய்ந்தமருது கல்முனை எல்லைப்பகுதியில் இருந்து ஆம்பித்து சிறிது தூரம் ஊர்வலமாக சென்று குறித்த போராட்டத்தை நிறைவு செய்தனர்.
இப்போராட்டத்தில் ஜனாதிபதி கோட்டா மற்றும் பிரதமருக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள் தற்போதைய அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
மேற்குறித்த இவ்விரு போராட்டங்களும் இன்று கொழும்பில் இடம் பெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.