வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் அயர்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

ஆசிரியர் - Admin
வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் அயர்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

அயர்லாந்து அணி டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை கடந்த வருடம் பெற்றது. அதன்பின் முதல் டெஸ்டை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட முடிவு செய்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் கடந்த 11-ந்தேதி டப்ளினில் தொடங்கியது.

டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. தங்களது நேர்த்தியான பந்து வீச்சால் பாகிஸ்தானை 350 ரன்களுக்கு மேல் தாண்டவிடாமல் பார்த்துக் கொண்டது. ஆல்அவுட் ஆக மனமில்லாத பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னி்ங்சை டிக்ளேர் செய்தது.

பின்னர் அயர்லாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. பாகிஸ்தானின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. கே ஓ’பிரைன் அதிகபட்சமாக 40 ரன்களும்  வில்லிசன் அவுட்டாகாமல் 33 ரன்களும்  ஸ்டிர்லிங், ராங்கின் தலா 17 ரன்களும் அடிக்க அயர்லாந்து முதல் இன்னிங்சில் 47.2 ஓவர்கள் விளையாடி 130 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

இந்த நான்கு பேரைத்தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணியின் முகமது அப்பாஸ் நான்கு விக்கெட்டும், சதாப் கான் 3 விக்கெட்டும், முகமது அமிர் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். அயர்லாந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 180 ரன்கள் பின்தங்கி பாலே-ஆன் ஆனது. பாகிஸ்தான் அணியும் பாலோ-ஆன் கொடுக்க அயர்லாந்து தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

முதல் இன்னிங்சில் சொதப்பிய அயர்லாந்து வீரர்கள் 2-வது இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்க வீரர் ஜாய்ஸ் 43 ரன்களும்இ போர்ட்டர்பீல்டு 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த பால்பிர்னி (0), என் ஓ பிரைன் (18), ஸ்டிர்லிங் (11) அடுத்தடுத்து ஆட்டமிழக்க அயர்லாந்து அணி திணறியது. அதன்பின் வந்த கே ஓ’பிரைன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு தாம்ப்சன் சப்போர்ட் கொடுத்து ஆடினார். இதனால் கே ஓ’பிரைன் 186 பந்தில் 10 பவுண்டரியுடன் சதம் அடித்தார். கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக களம் இறங்கிய அயர்லாந்து அணியின் கே ஓ’பிரைன் சதம் அடித்து சாதனைப் படைத்தார்.

ஸ்டூவர்ட் தாம்சன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அயர்லாந்து அணி 2-வது இன்னிங்சில் 339 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் மொகமது அப்பாஸ் 5 விக்கெட்களும்இ மொகமது ஆமிர் 3 விக்கெட்களும் வீழ்த்தினர். இதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 160 ரன்களை இலக்காக அயர்லாந்து அணி நிர்ணயித்தது.

2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அசார் அலி, இமாம் உல்-ஹக் ஆகியோர் களமிறங்கினர். அசார் அலி 2 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹாரிஸ் சொஹைல் 7 ரன்னிலும், அசாத் ஷபிக் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தாண் அணி 14 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன்பின் இமாம் உல்-ஹக் உடன், பாபர் அசாம் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினார்.

சிறப்பாக விளையாடிய இமாம் அரைசதம் கடந்தார். பாபர் அசாமும் அரைசதம் அடித்தார். அசாம் 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்தது. இமாம் உல்-ஹக் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று பாகிஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் 74 ரன்களுடன் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் டிம் முர்டாக் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதன்மூலம் ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. அயர்லாந்து அணியின் கேவின் ஓ’பிரைன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.