கிங்ஸ் லெவன் பஞ்சாப் மும்பையுடன் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல். போட்டியில் 50-வது ‘லீக்’ ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.
இதில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
பிளேஆப் வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளன. மும்பை அணி 12 ஆட்டத்தில் 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.
அந்த அணி எஞ்சிய 2 ஆட்டத்திலும் வென்றால் மட்டுமே ‘பிளேஆப்’ வாய்ப்பில் நீடிக்க முடியும் அதோடு ரன்ரேட்டையும் அதிகரிக்க வேண்டும். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் வெளியேற்றப்படும். இந்தூரில் நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி இருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.
மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் (473 ரன்), லீவிஸ் (325 ரன்), கேப்டன் ரோகித்சர்மா (267 ரன்), ஹர்த்திக் பாண்ட்யா (224 ரன், 18 விக்கெட்), குர்ணால் பாண்ட்யா (192 ரன், 11 விக்கெட்), மார்க்கண்டே (14 விக்கெட்), பும்ரா (13 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
தொடக்கத்தில் வெற்றிகளை பெற்று வந்த பஞ்சாப் அணி கடைசி 3 ஆட்டத்தில் தோற்றதால் நிலை குலைந்து போய் இருக்கிறது. அந்த அணி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து இன்றைய ஆட்டத்தில் வென்று ‘பிளேஆப்’ வாய்ப்பில் நீடிக்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சில் வலிமையாக இருக்கும் அந்த அணி பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. பெங்களூர் அணிக்கு எதிராக அந்த அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. முக்கியமான ஆட்டம் என்பதால் பஞ்சாப் அணி வீரர்கள் அதிரடியாக ஆடுவது அவசியமாகும்.
ஏற்கனவே ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க முழு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் ராகுல் (558 ரன்), கிறிஸ் கெய்ல் (350 ரன்), கருண்நாயர் (247 ரன்), ஆண்ட்ரூ டை (20 விக்கெட்), முஜிபுர் ரகுமான் (14 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும்.