SuperTopAds

நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஐனாதிபதி வழங்கியுள்ள பணிப்பு! நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறும் பணிப்பு..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஐனாதிபதி வழங்கியுள்ள பணிப்பு! நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறும் பணிப்பு..

நாட்டுக்கு தற்போது கிடைத்துள்ள எரிபொருள் மற்றும் அடுத்துவரும் நாட்களில் கிடைக்கவுள்ள எரிபொருளை நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பகிர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ பணித்துள்ளார்.

மத்திய வங்கியுடன் இணைந்து, அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஒத்துழைப்புக்களை பெற்று, நாட்டிற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான கடன் பத்திரங்களை விநியோகிக்கும் திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியன விநியோகித்தல் மற்றும் இறக்குமதி செய்தல் தொடர்பில், ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகால எரிபொருள் இறக்குமதியை செய்ய எரிபொருள் விநியோகத்தர்களுடன் உடன்படிக்கையை கைச்சாத்துவதில் காணப்படுகின்ற இயலுமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

எரிபொருள் விநியோகிக்கும்போது, பொது போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பொலிஸ் கண்காணிப்பின் கீழ், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக, தனியார் பஸ்கள், சுற்றுலாத்துறை பஸ்கள் மற்றும் பாடசாலை வாகனங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கு, அடையாளம் காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிபடையின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன், தேவையற்ற விதத்தில் எரிபொருளை சேகரித்து வைப்போருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும், ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தற்போது காணப்படுகின்ற சமையல் எரிவாயுவை, முறையாக விநியோகிக்குமாறும், நாட்டிற்கு தேவையான எரிவாயுவை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.