காணாமல் போன சிறுமியை கண்டுபிடிப்பதற்காக கல்முனை பொலிஸார் தீவிர விசாரணை
காணாமல் போன சிறுமியை கண்டுபிடிப்பதற்காக கல்முனை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை(29) மதியம் 2.30 மணியிலிருந்து குறித்த சிறுமி மாயமாகி உள்ளதாக குறித்த பாடசாலையின் நிர்வாகத்தினர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் மாலை முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்த குறித்த சிறுமி பலரால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் வழக்கு விசாரணையின் பின்னர் குறித்த பாடசாலையில் பாதுகாப்பிற்காக நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தங்கவைக்கப்பட்டிருந்தார்.
மேலும் இச்சம்பவத்தில் காணாமல் சென்ற சிறுமி நிந்தவூர் 2 இமாம் கஸ்ஸாலி வீதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க வதுர்தீன் பாத்திமா சஜானா என்பவராவார்.
குறித்த சிறுமி தங்க வைக்கப்பட்டிருந்த பாடசாலையில் சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை (29)பகல் உணவினை உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாகத்தில் நின்றதாகவும் பின்னர் திடிரென அவர் அங்கிருந்து காணாமல் சென்று விட்டதாக பாடசாலை காப்பாளர் தெரிவித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் சிறுகுற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான எம்.எல் றபீக் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதே வேளை கடந்த 2022.05.23 இரவு அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியிலுள்ள கடற்கரைக்கு சென்ற நிலையில் இரண்டுநபர்களால் இடைமறிக்கப்பட்டு அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு தூக்கிச் செல்லப்பட்டு துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தினை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.எம் றிபாஸ்தீன் தனது முகநூலின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.
இச்சிறுமியை சீரழித்த இருவரும் உறவினர்கள் என்பதுடன் உடந்தையாக உறவினர் ஒருவரின் தாய் உள்ளதாக அவரது முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் தொடர்பு பட்ட இரு சந்தேக நபர்களையும் அக்கரைப்பற்று பொலிஸார் தேடி வருகின்றனர்.