61 பந்தில் சதம் விளாசினார் அம்பதி ராயுடு

ஆசிரியர் - Admin
61 பந்தில் சதம் விளாசினார் அம்பதி ராயுடு

ஐபிஎல் தொடரின் 46-வது ஆட்டம் புனேயில் இன்று முதல் ஆட்டமாக நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 179 ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல், ரஷித் கான், ஷாகிப் அல் ஹசன் கொண்ட வலுவான பந்து வீச்சு யுனிட்டை கொண்டு இந்த தொடரில் பெரும்பாலான அணிகளை குறைந்த ஸ்கோரில் கட்டுப்படுத்தி வெற்றிவாகை சூடியுள்ளது.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் இலக்கை எட்ட கஷ்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்க வீரர்களாக வாட்சன் – அம்பதி ராயுடு ஜோடி பவுலிங் கோட்டையை தகர்த்தெறிந்தனர்.

பவர் பிளேயான முதல் 6 ஓவரில் 53 ரன்கள் குவித்தனர். வாட்சன் 31 பந்தில் அரைசதம் அடித்தார். 11-வது ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கி 31 பந்தில் அரைசதம் அடித்தார் அம்பதி ராயுடு. அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் 10.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

இந்த தொடரில் ஐதராபாத் அணிக்கெதிராக எடுக்கப்பட்ட 2-வது 100 பார்ட்னர்ஷிப் இதுவாகும். இந்த ஜோடி 13.3 ஓவரில் 134 ரன்னாக இருக்கும்போது பிரிந்தது. வாட்சன் 35 பந்தில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வாட்சன் அவுட்டானதும் அம்பதி ராயுடு வாணவேடிக்கை நிகழ்த்தினார். அவர் 19-வது ஓவரின் 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 61 பந்தில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பூர்த்தி செய்தார். அவரது சதத்தில் தலா 7 பவுண்டரி, சிக்சர்கள் அடங்கும்.

வலுவான பவுலிங் யுனிட்டை தகர்த்து அம்பதி ராயுடு சதம் அடித்ததுடன்  தனது அணியை பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு அழைத்துச் சென்றார்.