SuperTopAds

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் சென்னை இன்று மோதல்

ஆசிரியர் - Admin
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் சென்னை இன்று மோதல்

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சிய 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பட்டியலில் முதலிடத்தில் உள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இன்று புனேவில் உள்ள மகாராஷ்ரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் மோதுகிறது.

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2 வருட தடைக்குப் பிறகு திரும்பிய நிலையில் முதல் 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று வலுவான நிலையில் இருந்தது. அதன் பின்னர் நடப்பு சாம்பியனான மும்பை அணியிடம் தோல்வி கண்டது. தற்போதைய நிலையில் 11 ஆட்டங்களில், 7 வெற்றி, 4 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இன்னும் 3 ஆட்டங்கள் கையில் இருக்கும் நிலையில் ஒன்றில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்குள் கால்பதித்துவிடலாம்.

 நேற்றுமுன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் அறிமுக தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி கண்டதால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்காக இன்னும் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சென்னை அணி. அந்த ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்ந்திருந்தது. கடந்த 5 ஆட்டங்களில் சென்னை அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். ராஜஸ்தான் அணிக்கு எதிராக சென்னை அணி 176 ரன்கள் குவித்த போதிலும் மோசமான பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கால் வெற்றியை தாரைவார்த்திருந் தது.

களத்தில் எப்போதும் அமைதியாகவும், நிதானமாகவும் காணப்படும் தோனி ஆட்டம் முடிவடைந்ததும் பந்து வீச்சாளர்கள் மீது கடும் அதிருப்தி தெரிவித்தார். அவர் கூறும்போது, “நாங்கள் ஒரு குறிப்பிட்ட லெந்த்தில் தான் வீசியிருக்க வேண்டும், அதுதான் திட்டமும் கூட. பந்து வீச்சாளர்களிடம் தெளிவாக எப்படி வீச வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதாவது பேக் ஆஃப் லெந்த் பந்துகளை வீசுமாறு அறிவுறுத்தினோம். ஆனால் அவர்களால் திட்டத்தை சரியாகச் செயல்படுத்தவில்லை. ஃபுல் லெந்த் பந்துகளில் நிறைய பவுண்டரிகள் கொடுத்தோம். 176 ரன்கள் என்பது சரிநிகருக்கும் கூடுதலான ரன் எண்ணிக்கைதான். பந்து வீச்சாளர்கள்தான் எங்களைக் கைவிட்டனர்” என்றார்

சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் 2 ஓவர்களில் 29 ரன்களை தாரைவார்த்த நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். இதன் பின்னர் அவர் பந்துவீச அழைக்கப்படவே இல்லை. முக்கியமான கட்டத்தில் ஜாஸ் பட்லருக்கு ஷேன் வாட்சன், பிராவோ, தோனி ஆகியோர் கேட்ச்களை தவறவிட்டனர். மேலும் ஒரு கட்டத்தில் ஜாஸ் பட்லர் அதிக உயரத்துக்கு பந்தை தூக்கி அடித்த நிலையில் அதை பிடிக்க எந்த வீரரும் முன்வராததும் தோனியை விரக்தியடையச் செய்தது. எல்லாவற்றுக்கும் மேலாக 19-வது ஓவரை வீசிய டேவிட் வில்லே 19 ரன்களை தாரை வார்த்ததுதான் ராஜஸ்தான் அணியின் வெற்றியை சுலபமாக்கியது.

இதனால் சென்னை அணி இறுதி கட்ட பந்து வீச்சு பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டிய நிலையில் உள்ளது. அநேகமாக இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சில் மாற்றங்கள் இருக்கக்கூடும். பேட்டிங்கில் வழக்கம் போல ஷேன் வாட்சன், அம்பாட்டி ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி ஆகியோர் மட்டையை சுழற்ற தயாராக உள்ளனர். ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் 10 ஓவர்களில் சென்னை அணி 90 ரன்கள் குவித்த நிலையில் கடைசி 10 ஓவர்களில் பெரிய அளவில் ரன்கள் சேர்க்க தவறியது. அதிலும் 14 முதல் 17 ஓவர்கள் இடைவெளியில் வெறும் 23 ரன்களே சேர்க்கப்பட்டது. இதுவே பெரிய அளவில் ரன் குவிப்பதற்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. இந்த விஷயத்திலும் சென்னை அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

மறுபுறம் 11 ஆட்டங்களில், 9 வெற்றி, 2 தோல்விகளுடன் 18 புள்ளிகள் குவித்து புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிப்பதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டு லீக் சுற்றின் முடிவில் முதலிடத்தை பிடிப்பதில் அந்த அணி கவனம் செலுத்தக்கூடும். தொடக்க வீரரான ஷிகர் தவண், டெல்லி அணிக்கு எதிராக 92 ரன்கள் விளாசி பார்முக்கு திரும்பியிருப்பது அணியின் பேட்டிங்கை வலுவடையச் செய்துள்ளது. இந்த சீசனில் 493 ரன்கள் குவித்துள்ள வில்லியம்சனிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். யூசுப்பதான் (186), மணீஷ் பாண்டே (184), ஷகிப் அல்-ஹசன் (158) ஆகியோரும் நெருக்கடியான சூழ்நிலைகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்களாக உள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக குறைந்த அளவிலான ரன்கள் சேர்த்தாலும் வெற்றியை தேடித்தரக்கூடிய வகையிலான வலுவான பந்து வீச்சு குழுவை ஹைதராபாத் அணி பெற்றி பெற்றிருப்பது அதீதபலமாக உள்ளது.

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு அதிக சோதனைக்கு உள்ளானது. ரிஷப் பந்தின் காட்டடியால் ஒட்டுமொத்த ஹைதராபாத் அணியின் பந்து வீச்சும் சிதைவுக்கு உள்ளாகியிருந்தது. இதில் இருந்து மீண்டெழுந்து சென்னை அணியின் வலுவான பேட்டிங் வரிசைக்கு புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா, ரஷித் கான், ஷகிப் அல்-ஹசன் ஆகியோரை உள்ளடக்கிய ஹைதராபாத் பந்து வீச்சு குழு சவால் கொடுக்க முயற்சிக்கக்கூடும். இந்த சீசனில் இரு அணிகளும் 2-வது முறையாக நேருக்கு நேர் சந்திக்கின்றன.

கடைசியாக ஏப்ரல் 22-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இந்த தோல்விக்கு இம்முறை ஹைதராபாத் அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். போட்டி மாலையில் நடைபெறுவதால் உலர்ந்த ஆடுகளத்தால் சுழற்பந்து வீச்சு நன்கு எடுபடக்கூடும் என கருதப்படுகிறது. கடந்த 5-ம் தேதி இங்கு நடைபெற்ற மாலை நேர போட்டியின் போது முதலில் பேட் செய்த பெங்களூருவை 127 ரன்களுக்குள் சென்னை கட்டுப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது