அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களிலும் இராணுவ சோதனைச்சாவடிகள் வீதிரோந்து நடவடிக்கைகள்
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அம்பாறை மாவட்டம் இன்றைய தினம் (13)வெறிச்சோடி காணப்படுகின்றது.
அத்துடன் கல்முனை பெரியநீலாவணை சாய்ந்தமருது நிந்தவூர் சம்மாந்துறை அக்கரைப்பற்று பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கடுமையான ஊரடங்கு சட்டம் காரணமாக மக்கள் ஆர்ப்பாட்டங்களை கைவிட்டு தத்தமது வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் வெள்ளிக்கிழமை(13) 2 மணி முதல் ஆரம்பமாகி நாளை (14) காலை 7 மணி வரை அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் பொலிஸார் இம்மாவட்டத்தின் முக்கிய சந்திகளில் ரோந்து நடவடிக்கை மற்றும் சோதனை நடவடிக்கையினை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இன்று நற்பிட்டிமுனை கல்முனை சாய்ந்தமருது நிந்தவூர் அக்கரைப்பற்று பகுதிகளில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதேவேளை இப்பகுதிகளில் இன்று காலை பாடசாலைகள் அரச அரசார்பற்ற நிறுவனங்கள் வங்கிகள் வியாபார நிலையங்கள் திறக்கப்பட்ட போதிலும் மதிய நேரம் படிப்படியாக மூடப்பட்டிருந்ததுடன் வீதிகளும் வெறிச்சோடிக்காணப்பட்டன.
மேலும் சில இடங்களில் திறக்கப்பட்டிருந்த ஒரு சில வர்த்தக நிலையங்கள் பொலிசாரின் தலையீட்டை அடுத்து மூடப்பட்டன.
அத்துடன் தேவையான போது துப்பாக்கிச் சூடு நடத்துவது உட்பட சட்டத்தை பயன்படுத்துவதற்கு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலவரக்காரர்கள் அல்லது வன்முறைக் குழுக்களால் உயிர் இழப்பு அல்லது கொள்ளைச் சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவர்கள் வாகனங்களை நிறுத்தி சோதனையிடும் நடவடிக்கையை தடுப்பதற்காக அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரச அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம் கொள்ளை உயிர் இழப்பு அல்லது பாரிய காயங்களைத் தடுப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் பல வீதிகளில் இராணுவ வாகனங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அத்தோடுஇ சோதனைச்சாவடிகளிலும் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.