SuperTopAds

கைதான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

ஆசிரியர் - Editor III
கைதான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

புதிய ஆணையாளர் கடமையேற்க இருந்த சந்தர்ப்பத்தில் மாநகர சபையின் செயற்பாட்டிற்கு  இடையூறு விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின்  கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கைது செய்யப்பட்ட பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை மாநகர சபையின்  மாநகர ஆணையாளராக இருந்த  எம்.சி.அன்சாரின் இடமாற்றத்தின் பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக பொறியியலாளர் என். சிவலிங்கம் நியமிக்கப்பட்டு கடமையேற்கவிருந்தார்.

இந்நிலையில் இந்த நியமனம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் கல்முனை மாநகர சபையில் புதிய ஆணையாளராக பொறியியலாளர் என். சிவலிங்கம் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்க இருந்த நிலையில்  கடந்த 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை புதிய ஆணையாளருடன்  மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம்  இராஜன் மற்றும் பௌத்த தேரர் உள்ளிட்ட மத குருக்களும் மாநகர சபைக்கு வருகை தந்திருந்தனர். அப்போது ஆணையாளரின் அலுவலக அறையை திறக்குமாறு  மாநகர சபை உறுப்பினர் ச.ராஜன்  எமது மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தரை பலவந்தப்படுத்தி அச்சுறுத்தியதுடன் நிர்வாக செயற்பாடுகளுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தியிருந்ததுடன்  அது மாத்திரமல்லாமல் மாநகர சபையின் பிரதான நுழைவாயில் கதவுகளுக்கு அவர் பலாத்காரமாக பூட்டுப்போட்டு மூடி வைத்து மாநகர சபையின் அலுவலக செயற்பாடுகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். இதனால் நீண்ட நேரம் மாநகர சபையின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்ததுடன் அங்கு பரபரப்பான சூழ்நிலையும் பதற்றமும் ஏற்பட்டிருந்தது.

 பொலிஸாரின் வருகையையடுத்தே நுழைவாயில் கதவுகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன. இவ்வாறான அடாவடி செயற்பாடுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாகவே புதிய ஆணையாளரின் கடமையேற்பு நிகழ்வு  அன்று தடைப்பட்டிருந்தது.

இதனால்  இவ்விவகாரம் பொலிஸ் முறைப்பாடுகளையடுத்து நீதிமன்றம் வரை சென்று  கடந்த திங்கள் (04)  செவ்வாய் (05) இரு தினங்களும் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று இரு தரப்பினரதும் சமர்ப்பணங்களை உள்வாங்கிய நீதவான்  இவ்விடயம் தொடர்பில் இந்நீதிமன்றமானது எவ்வித கட்டளையையும் பிறப்பிக்கும் அதிகார வரம்புக்குட்பட்டதல்ல எனத் தெரிவித்து  வழக்கை முடிவுறுத்தி இருந்தார்.

இருந்த போதிலும் இன்று (8) மதியம்  மேற்படி சம்பவம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.இதன் போது சந்தேக நபரான தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திர சேகரம் ராஜனை  5 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ததுடன் சந்தேக நபரை எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி மன்றில் ஆஜர்படுத்துமாறு  உத்தரவிட்டார்.

 மேலும் இவ்விடயம் தொடர்பாக  மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்   தெரிவித்ததாவது

புதிய ஆணையாளர் தனது நியமனம் மற்றும் கடமையேற்பு குறித்து எனக்கு முறையாக அறிவித்துகலந்துரையாடியிருப்பாராயின் இவ்வாறான சர்ச்சைகளை தவிர்த்திருக்க முடியும். இவ்விடயத்தில் இனவாதிகளை முன்னிறுத்தியதால் அது அரசியலாகவும் இனவாதமாகவும் மாற்றப்பட்டு தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவித்திருக்கிறது.விடயம் இவ்வாறிருக்க இடமாற்றப்பட்ட ஆணையாளர் முஸ்லிம் என்பதாலும் புதிய ஆணையாளர் தமிழர் என்பதாலும் அவரை கடமையேற்க விடாமல் தடுக்கப்பட்டதாக மாநகர சபை உறுப்பினர் ராஜன் முகநூல்களில் இனவாத நச்சுக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

புதிய ஆணையாளர் கடமையேற்பு விடயத்தில் தான் மூக்கை நுழைத்து சண்டித்தன அரசியல் செய்ய முனைந்ததாலேயே ஆணையாளர் கடமையேற்பு சர்ச்சையாக மாறியது என்பதை மூடி மறைப்பதற்காகவே அவர் இவ்வாறான இனவாதக் கருத்துக்களை பரப்பி வருகின்றார்.கல்முனையில் எப்போதுமே இனவாதத்தை தூண்டி விடுகின்ற இவரது செயற்பாடுகள் குறித்து தமிழ் சமூகம்இ குறிப்பாக கல்முனை வாழ் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றார்.

முன்னாள்  கல்முனை மாநகர ஆணையாளராக செயற்பட்ட  ஏ.சீ. அன்சார்  கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.