மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை
மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு கல்முனை நீதிமன்ற நீதவான் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
சாய்ந்தமருது பகுதியில் கடந்த ஜனவரி மாதம் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தலைமறைவாகி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்த சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை(2) மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் திங்கட்கிழமை(4) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுடீன் தலைமையிலான குழுவினர் ஆஜர்படுத்தியதை அடுத்து சந்தேக நபரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கான அனுமதியை நீதவான் வழங்கி உத்தரவிட்டார்.
கடந்த 27.01.2022 அன்று அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான விடுதி ஒன்றிலிருந்து சந்தேக நபர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்முனை பகுதியை சேர்ந்த முகைதீன் பாவா லாபீர் (வயது-45) என்பதுடன் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.இச்சந்தேக நபர்
சாய்ந்தமருது 15ம் பிரிவிலுள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த 77 வயதுடைய சுலைமான் செய்யது முஹாரி எனும் மூதாட்டியை கொலை செய்து அவரிடமிருந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு அவரைக் கொலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தேடப்பட்ட நிலையில் கைதாகியுள்ளார்.மேற்படி கொலையாளி பல குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.