SuperTopAds

தென்கிழக்கு பல்கலை கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் அபாயம்?

ஆசிரியர் - Editor III
தென்கிழக்கு பல்கலை கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் அபாயம்?

தென்கிழக்கு  பல்கலை  கல்வி நடவடிக்கைகள்  இடைநிறுத்தப்படும் அபாயம்?

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 பல்கலைக்கழகத் துணைவேந்தர்   தலைமையில்  இடம்பெற்ற பீடாதிபதிகள் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசுக்கெதிராக மாணவர்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்தின் எதிரொலியாகவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, மின்சாரம் இன்மையால் மின்பிறப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவதுடன் அவற்றை செயற்படுத்தவும் தற்போது டீசல் இல்லாது போயுள்ள நிலையில் கல்வி சார் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மாணவர் நலன்கருதி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்துப் பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதுடன், விடுதிகளில் தங்கி நிற்கும் மாணவர்களை விடுதிகளில் இருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் பரீட்சை மற்றும் அத்தியாவசிய ஆய்வு நடவடிக்கைகளுக்காக  இறுதி வருட மாணவர்களுக்கு மாத்திரம் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதிகளில் உள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும்இ மாணவர்களின் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கமைய  விடுதிகளை விட்டு வெளியேறுவதற்குப் போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


மேலும் அண்மைக்காலமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வுகாணக்கோரி  வட கிழக்கு உள்ளிட்ட இதர  பல்கலைக்கழக மாணவர்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதே வேளை மேற்படி விடயங்களை உறுதிப்படுத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினரின் தொடர்பினை ஏற்படுத்துவதற்கு முயற்சித்த போதிலும் பதில் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.