ஊரடங்குச் சட்டத்தால் அம்பாறை மாவட்டத்தில் வெறிச்சோடிய வீதிகள்-சில இடங்களில் மக்கள் நடமாட்டம்
இலங்கை அரசாங்கம் நாடு முழுவதும் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதுடன்ள நேற்று மாலை முதல் ஊரடங்குச்சட்டம் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முழுமையாக மக்கள் ஊரடங்குச் சட்டத்தை அனுசரித்து வருகின்றனர்.
இருந்த போதிலும் சில இடங்களில் எரிவாயு மற்றும் எரிபொருளுக்காக மக்கள் அதிகளவாக குவிந்து காணப்பட்டனர்.
இதனை தொடர்ந்து இராணுவம் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றனர்.
மேலும் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான கல்முனை, காரைதீவு ,சாய்ந்தமருது ,நிந்தவூர் ,சம்மாந்துறை, அக்கரைப்பற்று ,போன்ற பிரதேசங்களில் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளதுடன் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன
இதேநேரம் கல்முனை மருதமுனை எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் டீசல் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் வாகனங்கள் காத்துக்கொண்டு இருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை(02) மாலை 6 மணி தொடக்கம் நாளை (4) திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரை பொது முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.
6 மணியை கடந்த நிலையிலும் சம்மாந்துறை கல்முனை நகர் பகுதியில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் வழமை போன்று இயங்கி வந்த நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மின்தடை ஏற்பட்ட நிலையில் மக்களின் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.
நேற்றிரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை கல்முனை ,சம்மாந்துறை சாய்ந்தமருது காரைதீவு பொலிஸ் நிலைய பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10க்கும் அதிகமானவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.