புதிய வகை 'ஒமைக்ரான்' வைரஸ்!! -எச்சரிக்கும் சுகாதார அமைப்பு-
ஒமைக்ரான் வைரசின் துணை வைரஸ்கள் இணைந்து புதிய வகை கொரோனா வைரசை உருவாக்கி உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா வைரசால் தொற்றின் தினசரி பாதிப்புக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும், மரபணு மாறிய புதிய வகை வைரஸ்கள், அச்சுறுத்தலாகவே உள்ளன.
இந்நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ், பரவ ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒருவர், இரண்டு வகை வைரஸ்களால் பாதிக்கப்பட்டால், அவை, புதிய வகை வைரஸ் உருவாக வழிவகுக்கின்றன.இதன்படி, ஒமைக்ரான் வைரசின் பிரிவுகளான பி.ஏ., 1 மற்றும் பி.ஏ., 2 வகை வைரஸ்கள் சேர்ந்து, எக்ஸ்.இ., என்ற மரபணு மாறிய புதிய வகை வைரசை உருவாகி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை வைரசால், பிரிட்டனில் ஜனவரி 19ம் தேதி, முதல் பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை, 600க்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.