சடலத்தை அடையாளம் காண உதவுங்கள்
கடற்கரை பகுதியில் மீட்கப்பட்ட மனித உடலை இனங்காண பொதுமக்கள் உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று - கடற்கரைப் பிரதேசத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் நபரொருவரின் சடலமொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (29) மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
நடுத்தர வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இவ்வாறு அக்கரைப்பற்று கடற்கரையில் கரையொதுங்கி உள்ள நிலையில் இதுவரையும் இவரது பெயர், விலாசம் போன்ற எந்த வித தகவலும் எமக்கு கிடைக்கப்பெறாத நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
எனவே இவர் தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி காரியாலயத்தை 074 136 6619 எனும் தொடர்பிலக்கத்தின் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தில் வழமை போன்று கரைவலை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே மீனவர்களின் வலையில் அகப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கரைவலை மீனவர்கள் தமது வலையினை கரைக்கு ஒதுக்கிக் கொண்டிருந்த போது சடலமொன்று வலைக்குள் இருப்பதை அறிந்த மீனவர்கள் சடலத்தினை கரைக்கு ஒதுக்கியுள்ளனர்.
கரையொதுக்கப்பட்ட சடலத்தின் கழுத்து மற்றும் தலைப் பகுதியில் இரத்தக்காயங்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மற்றும் அம்பாறை தடயவியல் பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்