SuperTopAds

குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் ஸ்தாபகருமாகிய அமரர் ஈழகேசரி நா.பொன்னையாவின் ஞாபகார்த்த விழா

ஆசிரியர் - Admin
குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் ஸ்தாபகருமாகிய அமரர் ஈழகேசரி நா.பொன்னையாவின் ஞாபகார்த்த விழா

ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகைத்துறை மற்றும் அச்சுத்துறையின் பிதாமகர்களுள் ஒருவரும், குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் ஸ்தாபகருமாகிய அமரர்-ஈழகேசரி நா.பொன்னையாவின் ஞாபகார்த்த விழா யாழ்.குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(06) யாழ். குரும்பசிட்டி கலைஞானி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் உபதலைவர் பா. செந்தூரன் தலைமையில் பா.செந்தூரன் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு ஈழகேசரி நா.பொன்னையா ஞாபகார்த்த உரை நிகழ்த்தினார்.

இதன் போது அமரர் கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரையின் ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்த வருடம் நாடகத்துறை சார்ந்து நா.விமலநாதன் விருதைப் பெற்றுக்கொண்டார். நயினை கி.கிருபானந்தா விருது அறிமுகவுரையை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து பேராசிரியர் தி.வேல்நம்பியை நடுவராகக் கொண்டு “இன்றைய ஊடகங்கள் சமூக மேம்பாட்டிற்கு வரமா? சாபமா?” எனும் பொருளில் பட்டிமண்டபம் இடம்பெற்றது.

இந்தப் பட்டிமண்டப நிகழ்வில் ‘வரமே’ என்ற அணியில் ச.லலீசன், இ.சர்வேஸ்வரா, ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ ஆகியோரும் ‘சாபமே’ என்ற அணியில் வே.சிவராசா, ந.ஐங்கரன், த.ஐங்கரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

ஊடகங்கள் “வரமே” என்ற அணியே இறுதியில் வெற்றியீட்டியது.

விழாவின் நிறைவாக அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவர்கள் வழங்கிய காவடியாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் ஆகிய பாரம்பரியக் கலைநிகழ்வுகள் “கிராமிய சங்கமம்” எனும் பெயரில் களைகட்டின.