SuperTopAds

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை!! -முதல் முறையாக விசாரணைக்கு ஆஜராகிறார் ஓ.பி.எஸ்-

ஆசிரியர் - Editor II
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை!! -முதல் முறையாக விசாரணைக்கு ஆஜராகிறார் ஓ.பி.எஸ்-

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. ஜெயலலிதாவோடு தொடர்புடையவர்கள், வைத்தியசாலையில் அவருக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர்கள் உள்ளிட்ட பலரிடம் பல்வேறு கட்ட விசாரணை நடந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குறித்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதன்பின் மீண்டும் விசாரணை நடத்த நீதிமன்றத்திற்கு அனுமதி அளித்ததையடுத்து, 3 ஆண்டு இடைவெளிக்கு பின் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. 

2016, டிசம்பர் 4 ஆம் திகதி ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது மாரடைப்புதான் என்றும் அதற்கு உரிய சிகிச்சை அனைத்தும் வழங்கப்பட்டதாகவும் விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ வைத்தியர் மதன்குமார் வாக்குமூலம் அளித்தார்.

அதன்பின் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் உறவினர் இளவரசியையும் மார்ச் 21 ஆம் திகதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது. அதன்படி ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக நாளை விசாரணைக்கு ஆஜராக உள்ளார். காலை 10.30 மணியளவில் இளவரசி ஆஜராகிறார். அதன்பின்னர் 11.30 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகிறார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து குற்றச்சாட்டுக்களையும், சந்தேகங்களையும் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இது தொடர்பாக நாளைய விசாரணையின்போது நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம் கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.