டோனியிடம் ஆசிர்வாதம் வாங்க தடையை மீறி மைதானத்துக்குள் வந்த ரசிகர்
11-வது ஐபிஎல் தொடரின் 35-வது ஆட்டம், மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நேற்று நடைபெற்றது.
இதில் பெங்களூரு, சென்னை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பார்திவ் பட்டேல் 53, டிம் சவுத்தி 36 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய சென்னை அணி, நிதானமாக விளையாடியது.
இறுதிய் 18 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்த சென்னை அணி, இந்த ஐபிஎல் தொடரில் 7-வது வெற்றியை பதிவு செய்தது. அதிகபட்சமாக அம்பதி ராயுடு 32, டோனி 31, ரெய்னா 25 ரன்கள் எடுத்தனர்.
இந்நிலையில் ஆட்டம் முடிந்தவுடன் ரசிகர் ஒருவர் தடுப்புகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபர் நேராக டோனியிடம் ஓடி வந்து, அவரது காலில் விழுந்து வணங்கினார். இது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அரங்கமே எழுந்து நின்று, கைதட்டலுடன் ஆரவாரம் செய்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த 3-ம் தேதி கொல்கத்தாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது ரசிகர் ஒருவர் டோனியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.