ரணிலுடன் ஈபிஆர்எல்எவ் நடத்திய பேரம் - வெளியிட்டார் சிவசக்தி அனந்தன்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாம் வெறுமனே ஆதரவளிக்கவில்லை. எழுத்து மூலம் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்ட பிறகே ஆதரவினை வழங்கியுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா, பாவக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
“அண்மையில் நானும் எனது கட்சியின் தலைவரும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உரையாடி இந்தோம். இந்த சந்திப்பு குறித்த உண்மையை தெரியாத சிலர் பொய்யாக வதந்திகளை பரப்பி வந்தனர். ஆனால் அந்த சந்திப்பின் உண்மைத் தன்மையினை தற்போது வெளிப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.
நாம் அரசியல் கைதிகள் விடுதலை, மீள்குடியேற்றத்தில் உள்ள பிரச்சினைகள், காணி விடுவிப்பு, காணாமல் போனோர் ஆகிய விடயங்கள் உள்ளடக்கிய சில கோரிக்கைகளையே பிரதமருக்கு எழுத்து மூலமாக முன்வைத்தோம்.இந்த நிலையில் குறித்த கோரிக்கைக்கு பிரதமர் ரணில் உடன்பட்டதுடன், எழுத்து மூலமாக கையெழுத்திட்டு ஒப்பந்தமொன்றை வழங்கியுள்ளார்.
நாம் வெறுமனே பிரதமருக்கு ஆதரவளிக்கவில்லை. எழுத்துமூல உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே ஆதரவினை வழங்கியுள்ளோம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்பந்தனும் 3 வரவு செலவுத் திட்டத்துக்கும் ஆதரவளிக்க எவ்வித எழுத்து மூல ஒப்பந்தத்தையும் செய்ய முடியாதுள்ளது.
இதற்கு காரணம் அவர்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதால் எதனையும் கோர முடியாதவர்களாக உள்ளனர்.ஒரு தனி மனிதனாகிய என்னால் ரணில் விக்ரமசிங்கவுடன் நிபந்தனை போட முடியுமாக இருந்தால் 15 பேராக உள்ள கூட்டமைப்பினர் மக்களுக்காக எவ்வளவு விடயங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமருடன் செய்ர் கொண்ட ஒப்பந்தத்தையும் மக்கள் முன்பு காட்டியமை குறிப்பிடத்தக்கது.