மாகாணசபையை பொறுப்பெடுத்து அதை அர்த்தமுள்ள நிர்வாகமாக செயற்படுத்த விரும்புகின்றேன்

ஆசிரியர் - Admin
மாகாணசபையை பொறுப்பெடுத்து அதை அர்த்தமுள்ள நிர்வாகமாக செயற்படுத்த விரும்புகின்றேன்

மாகாணசபையை பொறுப்பெடுத்து அதை அர்த்தமுள்ள நிர்வாகமாக செயற்படுத்த விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஆரம்பகாலங்களில் புலிகள் இந்த சபை முறைமையை நிராகரித்திருந்தார்கள். இது அவர்களுடைய அரசியல் நிலைப்பாடாகும்.

அதன்பின்னர் நெருக்கடிகள் நிறைந்த சந்தர்ப்பத்திலும் அதைப் பொறுப்பேற்று நிர்வாகம் செய்தவர்கள் அதனை சரியாக நிர்வகிக்காததன் விளைவாக அது செயலற்றுக்கிடந்தது.

இக்காரணங்களால் தமிழ் மக்களது பெரும் தியாகங்களுக்கு மத்தியில் கிடைக்கப்பெற்ற இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பலாபலன்களையும் மாகாணசபையின் நன்மைகளையும் இறுதி இலக்கை நோக்கி பயணிக்கும் வாய்ப்பினை தமிழ் மக்கள் இழந்திருந்தனர்.

நெருக்கடியற்ற ஒரு சூழ்நிலையில் அந்தவாய்ப்பு மீண்டும் தமிழ் மக்களை நோக்கி வந்தபோது சந்திரனை கொண்டுவந்து அருகில் தருவோம், நட்சத்திரங்களை உடைத்து தருவோம் என உணர்ச்சிப் பேச்சுக்களை பேசி அதிகாரங்களை பெற்றவர்கள் கிடைக்கப்பெற்ற அரிய வாய்ப்பையும் சரியாக நிர்வகிக்கவில்லை.

அவர்கள் குற்றச்சாட்டுக்களையும் குறைகளையும் முன்வைப்பதனூடாக தமது இயலாமையை வெளிப்படுத்துகிறார்களே தவிர மாகாணசபையின் உச்ச பலாபலன்களை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்வதற்காக அர்த்தமுள்ள முயற்சிகளையோ அல்லது விருப்பமுடனோ அவர்கள் செயற்படவில்லை.

இவ்வாறு முடங்கிக் கிடக்கும் மாகாணசபை முறைமையை மீண்டும் திறம்பட செயற்படுவதற்கு மீண்டும் தமிழ் மக்களுக்கு ஒரு வாய்ப்பு வெகு விரைவில் வரவுள்ளது. அதை தமிழ் மக்கள் சரியான முறையில் பயன்படுத்தவேண்டும்.

நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் மக்களோடு வாழ்ந்து மக்களுக்கான சேவைகளை செய்தவர்கள் என்ற அடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கரங்களுக்கு வடக்கு மாகாணசபை கிடைக்கப்பெறுமாக இருந்தால் நான் ஏற்கனவே கூறியதுபோல எமது தாயக பிரதேசத்தை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றியமைப்பதுடன் எமது மக்களது பொருளாதார வறுமைகளை இல்லாதொழித்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இறுதித் தீர்வை அடையும் திசை நோக்கி வழிநடத்துவேன் என்ற நம்பிக்கையும் அதற்கான உழைப்பும் உள்ளார்ந்த விருப்பும் எம்மிடம் உள்ளது.

இந்த அடிப்படையிலேயே நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகின்றேன். நான் மக்களை விட்டு ஓடியதும் இல்லை. ஓடப் போவதும் இல்லை. குறைகூறிக்கொண்டு இருக்கவும் போவதில்லை.

மாகாணத்தில் அதிகாரங்கள் குவிந்து கிடக்கும்போது மத்திய அரசுகளை எவ்வாறு கையாளவேண்டும் என்ற நீண்டநாள் அனுபவம் எனக்குண்டு.

இதற்கிணங்கவே ஈ.பி.டி.பியின் வெற்றி மக்களின் வெற்றி மக்களின் வெற்றி ஈ.பி.டி.பியின் வெற்றி என்று கடந்த தேர்தலில் நான் கூறியிருக்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு