ரஷியா உரிய விலையை கொடுக்கும்!! -உக்ரைன் ஜனாதிபதி ஆவேசம்-

கடவுளிடமிருந்து ரஷியாவால் ஒருபோதும் தப்ப முடியாது என்று தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி போரை ஆரம்பித்த ரஷியா, அதற்கான விலையை கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:-
உக்ரைனின் பல பகுதிகளுக்கு ரஷிய படையினர் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால் ஒரு இடத்தில் கூட அவர்களால் முன்னேற முடியவில்லை. உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. ஏனெனில், தாய்நாட்டை காப்பதற்காக இலட்சக்கணக்கான உக்ரைன் மக்கள், இராணுவத்தினருடன் இணைந்து ரஷிய படைகளுக்கு எதிராக போரிடுகின்றனர்.
மக்களின் இந்த எழுச்சியை ரஷிய இராணுவம் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. உக்ரேனியர்களின் வீரத்தை பார்த்து ரஷிய படையினர் பல இடங்களில் இருந்து பின்வாங்கி வருவதாக செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.
இதுபோன்ற பகுதிகளில், ரஷிய இராணுவத்தினரை உக்ரைன் மக்கள் சிறைப்பிடித்துள்ளனர்.
உக்ரைன் மீது போரை தொடுத்ததற்காக ரஷ்யா உரிய விலையை கொடுக்கும். நாங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், சுதந்திரத்தை இழந்துள்ளோம். அனைத்து வீடுகள், தெருக்கள், நகரங்கள் அனைத்தையும் சீரமைப்போம்.
உக்ரைனுக்கு எதிராக செய்த அனைத்திற்கும் நீங்கள் திருப்பி செலுத்துவீர்கள் என ரஷியாவிற்கு கூறி கொள்கிறேன் என்றார்.