ரஷ்ய டாங்கிகளின் பலவீன பகுதிகள் எவை? -பெட்ரோல் குண்டுவீசி தாக்குவது எவ்வாறு என மக்களிற்கு பாடமெடுக்கும் உக்ரைன் இராணுவம்-
ரஷ்ய இராணுவத்தினரின் கனரக வாகனங்கள் டாங்கிகளின் பலவீன பகுதிகளை காண்பிக்கும் இன்போகிராபிக்சினை ருவிட்டரில் வெளியிட்டுள்ள உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களை அவற்றை இலக்குவைத்து பெட்ரோல் குண்டுகளை வீசுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ரஷ்ய இராணுவத்தினருக்கு எதிராக ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் தற்பாதுகாப்பு தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உக்ரைன் அரசு வீடுகளில் வெடிபொருட்களை பெட்ரோல்குண்டுகளை எப்படி தயாரிப்பது என்ற விபரங்களை தனது இணையத்தளங்களிலும் சமூக ஊடக பக்கங்களிலும் வெளியிட்டு வருகின்றது.
உக்ரைன் மக்கள் பெட்ரோல் குண்டுகளை அல்லது மொலொட்டொவ் கொக்டெய்ல்களை தயாரிப்பதை பார்த்துள்ளதாக பி.பி.சி தெரிவித்துள்ளது. மொலொட்டொவ் கொக்டெய்ல்கள் ஸ்டாலின் காலத்தின் வெளிவிவகார அமைச்சர் வியாசஸ்லாவ் மொலோட்டொவ்வினை நினைவுகூறும் வகையில் பெயரிடப்பட்டவை.