எதிர்வரும் 24 மணி நேரம் மிக கடுமையானதாக இருக்கும்!! -உக்ரைன் ஜனாதிபதி-
இன்று 5 ஆவது நாளாக தொடர்ச்சியான போர் நடைபெற்று வரும் நிலையில் எதிர்வரும் 24 மணி நேரம் மிகவும் கடுமையானதாக இருக்கும் என உக்ரைன் ஜனாதிபதி விளோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இருதரப்பினருக்கும் இடையில் மோதல் அதிகரித்து வரும் நிலையில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, வார இறுதியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 90 சதவீதத்திற்கும் அதிக உக்ரைனியர்கள் அந்த நாட்டு ஜனாதிபதி செலன்ஸ்கியை ஆதரித்துள்ளனர்.
சமூக குழு ஒன்றினால் குறித்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த டிசம்பர் மாதத்தினை காட்டிலும் 3 மடங்கு அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2 ஆயிரம் பேர் பங்கேற்ற குறித்த கருத்துக் கணிப்பில், 91 சதவீத பேர் உக்ரைன் ஜனாதிபதியை ஆதரித்துள்ளதுடன், 6 சதவீத பேர் மாத்திரமே அவரை நிராகரித்துள்ளனர். மேலும் 3 சதவீதம் பேர் எவ்வித தீர்மானங்களையும் வெளியிட்டிருக்கவில்லை.
கிரிமியா மற்றும் கிழக்கு உக்ரைனில் உள்ளவர்கள் இந்த வாக்கெடுப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை என்ற போதிலும் நாடு முழுவதிலும் உள்ளவர்களின் நிலைப்பாடு கோரப்பட்டுள்ளது.
அதேநேரம், உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய தாக்குதலை முறியடிக்க முடியும் என 70 சதவீதம் பேர் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.