பெண்களின் டிஜிட்டல் அறிவை மேம்படுத்தும் ‘ஜனனி’ வேலைத்திட்டம் கல்முனையில் முன்னெடுப்பு
பிரதேச மட்ட அரசியலில் ஈடுபடும் பெண் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெண் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் டிஜிட்டல் அறிவினை மேம்படுத்துவதற்கான 'ஜனனி' திட்டத்தினை சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்குமான மக்கள் இயக்கம் (கபேஅமைப்பு ) தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் முன்னெடுத்து வருகின்றது.
இந் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டத்திற்கான முதலாம் கட்ட நிகழ்வு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) தேசிய நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் அவர்களின் நெறிப்படுத்தலில் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எஸ்.எல்.அஸீஸ் அவர்களின் இணைப்பில் கல்முனையில் சனிக்கிழமை(26) மாலைஇடம்பெற்றது .
இந் நிகழ்வில் டிஜிட்டல் கல்வியறிவினை மேம்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களின் முக்கியத்துவம், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் ஊடக கோட்பாடுகள், ஊடக சந்திப்புக்களில் உரையாற்றுகின்ற விதம் மற்றும் தகவல் அறியும் சட்டம்,இணையவழி வன்முறைகளை தொழில்நுட்ப ரீதியாக எவ்வாறு முகம் கொடுப்பது என்பது பற்றியும், இணையவழி வன்முறைகளுக்கு முகம் கொடுக்கின்ற போது, அவற்றுக்கு சட்ட ரீதியாக எவ்வாறு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் வளவாளர்களினால் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச மட்ட அரசியலில் ஈடுபடும் பெண் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெண் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதன் போது வளவாலராக அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம் சுபியான், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடக செயலாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜெ.யோகராஜ் , விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் ஊடகவியலாளர் ரிப்தி அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.