சூரியகாந்தி விதைகளை பொக்கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்: உக்ரைனில் புதைக்கப்படும் பேர்து செடியாவது வளரட்டும்!! -ரஷிய இராணுவத்துடன் வாதிட்ட பெண்-
ரஷிய இராணுவ வீரர் ஒருவரை நோக்கி பெண் ஒருவர் வீராவேசமாகப் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவிவருகிறது.
உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் இல்லை என்றும் கூறிக் கொண்டு அந்நாட்டின் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு புதின் நேற்று உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து ரஷிய படைகள் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்து வருகின்றன. தாக்குதலை ரஷிய படைகள் இன்று 2-வது நாளாக தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கீவ் நகருக்குள் ஊடுருவி உள்ள ஆயுதம் தாங்கிய ரஷிய வீரரிடம், "உங்களுக்கு எங்கள் மண்ணில் என்ன வேலை?" என்று கேள்வி எழுப்பிய உக்ரைன் பெண்ணின் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
அந்த பெண் ரஷிய ராணுவ வீரரிடம் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியுள்ளார். அந்தப் பெண் சற்றும் அஞ்சாமல் ரஷிய வீரரிடம் வாதிடுவதை வழிப்போக்கர் ஒருவர் வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர, அது தற்போது உலகம் முழுவதும் வைரலாகிவிட்டது.
அந்த வீடியோவில் அப்பெண், ஆயுதம் ஏந்திய ரஷிய வீரரைப் பார்த்து, "நீங்கள் யார்?" எனக் கேட்கிறார். அந்த வீரர் "எங்களுக்கு இங்கே வேலை இருக்கிறது. நீங்கள் அந்தப் பக்கம் செல்லுங்கள்" எனக் கூறுகிறார்.
"பாசிசவாதிகளே... இங்கே உங்களுக்கு என்ன வேலை?" என்று மீண்டும் அந்தப் பெண் உக்கிரமாகப் பேசுகிறார். அதற்கு அந்த வீரர் நிதானமாக, "நமது பேச்சால் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் செல்லலாம்" எனக் கூறுகிறார்.
ஆனால் அந்தப் பெண் சற்றும் சமாதானமடையவில்லை. உங்கள் பொக்கெட்டில் கொஞ்சம் சூரியகாந்தி விதையைப் போட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் வீழ்த்தப்பட்டு உக்ரைனில் புதைக்கப்படும் போது அந்த விதையாவது வளரட்டும் என்று கூறி விட்டு செல்கிறார். சூரியகாந்தி மலர், உக்ரைன் நாட்டின் தேசிய மலர் ஆகும்.
அடையாளம் தெரியாத அந்த பெண்ணின் துணிச்சலுக்கு ருவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
https://twitter.com/DogreatSilenced/status/1497084554296770560?s=20&t=jJ37HyfWBNv5aSUtUE96Dg