SuperTopAds

உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவின் அறிவிப்பால் பதற்றம் அதிகரிப்பு!! -அவசரமாக கூடும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்-

ஆசிரியர் - Editor II
உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவின் அறிவிப்பால் பதற்றம் அதிகரிப்பு!! -அவசரமாக கூடும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்-

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு பேரவை இன்று செவ்வாய்க்கிழமை அவசர கூட்டத்தை நடத்த உள்ளது. இன்றுவரையான நிலவரப்படி, உக்ரைனில் தாக்குதல் நடத்த ஏதுவாக ரஷிய போர் படைகள் பெருமளவில் உக்ரைன் எல்லை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, திடீர் அறிவிப்பாக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி புதின் நேற்று திங்கட்கிழமை அறிவித்தார். 

இந்த அறிவிப்பு காரணமாக பதற்றம் மேலும் அதிகரித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன. உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி பைடன் அறிவித்துள்ளார்.

டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் மாகாணங்களை "சுதந்திரமானவை" என்று அங்கீகரிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புதினின் முடிவை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி ஜே பிளிங்கன் ஒரு அறிக்கை வெளியிட்டார். 

ரஷியாவின் அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜேர்மன் சான்சிலர் ஓலாப் ஸ்கோல்ஸ் ஆகியோருடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார். 

மேலும், அமெரிக்க ஜனாதிபதி பைடன், நேற்று திங்கட்கிழமை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேசினார். உக்ரைனின் சுதந்திரத்தை பாதுகாக்க அமெரிக்கா துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.

ரஷியாவின் அறிவிப்பை தொடர்ந்து, உக்ரைன் விவகாரம் தொடர்பாக  ஐ.நா பாதுகாப்பு பேரவை அவசர கூட்டத்தை நடத்த அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் கோரிக்கை விடுத்தன. இதனை தொடர்ந்து, இன்று செவ்வாய்க்கிழமை உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு பேரவை அவசர கூட்டத்தை நடத்த உள்ளது.