உள்ளாட்சி தேர்தல்: முதல் ஆளாக வாக்களித்த நடிகர் விஜய்!
நடிகர் விஜய் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த நிலையில் ஓட்டு போடுவதற்கு முன்னர் இயந்தரம் அருகே சிறிது நேரம் அப்படியே நின்றிருந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக காலை 7 மணிக்கு விஜய் கிளம்புவார் என அவரது மக்கள் தொடர்பாளர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
எனவே காலை 5 மணியிலிருந்தே அவரது வீட்டின் முன் ரசிகர்கள் குவியத் தொடங்கினர். போலீஸாரும் காலை முதலே விஜய் வீட்டின் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
7.05 மணிக்கு அவர் தனது சிவப்பு நிற காரில் கிளம்பினார். தனது வீட்டின் பின்புறம் உள்ள நீலாங்கரை வேல்ஸ் இண்டர்நேஷ்னல் பள்ளியில் 192ஆவது வார்டில் விஜய் வாக்கு செலுத்தச் சென்றார். அவரது காரை இரு சக்கர வாகனங்களில் அவரது ரசிகர்கள் பின் தொடர்ந்து சென்றனர்.
ரசிகர்கள் அவரை சூழ்ந்து செல்பி எடுக்க முயன்றனர். ஒரு சில ரசிகர்களுடன் அவர் செல்ஃபி எடுத்துக் கொண்டார். பின்னர் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றார். அடையாள அட்டை சரிபார்ப்பு முடிந்த பின்னர் விஜய் கையில் மை வைக்கப்பட்டது. அதன் பின்னர் விஜய் வாக்கு செலுத்தும் இடத்துக்கு வந்தார்.
அப்போது அவரை சுற்றி ஒளிப்பதிவாளர்கள் கூட்டம் முண்டியடித்த நிலையில் தான் யாருக்கு வாக்கு அளிக்கிறோம் என்பது கேமராவில் பதிவாகிவிடும் என்பதற்காக அவர் சிறிது நேரம் வாக்களிக்காமல் நின்றார்.
சுற்றியிருந்தவர்களை நகர்ந்து செல்லுமாறு கையசைத்துக் கொண்டே நின்றிருந்தார். சுற்றியிருந்தவர்கள் விலகிய பின்னரே விஜய் வாக்களித்தார்.