உக்ரைன் மீது 29 முறை குண்டுவீசி தாக்குதல்!! -அதிகமாகும் போர் பதட்டம்-
உக்ரைன் கிழக்குப் பகுதி மீது இன்று வெள்ளிக்கிழமை காலை பல முறை குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷியா - உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருகின்ற நிலையில் உக்ரைன் மீது இன்று குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது. டான்பஸ் உக்ரைனின் எல்லையோர மாகாணமாகும். இந்த மாகாணத்தில் ஒரு பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
டான்பஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா என்ற நகரில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை திடீரென குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றது. அந்த கிராமத்தில் உள்ள சிறுவர் பாடசாலை மீது இந்த தாக்குதல் நடைபெற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்து குண்டுகள் வீசப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் சிறுவர் பாடசாலையில் பணியாற்றி வந்த 2 ஆசிரியர்கள் காயமடைந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலுக்கு உள்ளான கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை யார் நடத்தியது என்று இன்னும் முழுமையான தகவல் வெளியாகவில்லை. ஆனால், ரஷியாவே இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
அதேவேளை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இந்த குண்டு வீச்சு தாக்குதலை நடத்தினரா? அல்லது உண்மையிலேயே ரஷியா தான் இந்த குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியதா? அல்லது வேறு யாரேனும் இந்த தாக்குதலை இந்த குண்டு வீச்சு தாக்குதலை நடத்தினரா? என பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.