செயலிழந்துள்ள தெரு மின்குமிழ்களை அகற்றி புதிய மின்குமிழ்களை பொருத்தும் செயற்பாடு முன்னெடுப்பு

செயலிழந்துள்ள தெரு மின்குமிழ்களை அகற்றி புதிய மின்குமிழ்களை பொருத்தும் செயற்பாடு முன்னெடுப்பு
செயலிழந்துள்ள தெரு மின்குமிழ்களை அகற்றி புதிய மின்குமிழ்களை பொருத்துதல் மற்றும் இருளடைந்த பகுதிகளை ஒளிரூட்டுதல் போன்ற செயற்பாடுகளை இரவு பகலாக கல்முனை மாநகர பொது வசதி பிரிவு முன்னெடுத்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மருதமுனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு ,மாநகர பகுதிகளில் உள்ள மின்குமிழ்கள் ஒளிராமை குறித்து பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் ஆலோசனையின் பிரகாரம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மேற்படி பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக பல மின்கம்பங்களில் இணைக்கப்பட்ட மின்குமிழ்கள் செயலிழந்திருந்தன.இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதுடன் திருட்டுச்சம்பவங்கள், விபத்துக்கள் அதிகரித்திருந்தன.
இதனை தொடர்ந்து அதிகளவான மக்கள் பயன்படுத்தும் நற்பிட்டிமுனை தொடக்கம் கல்முனை பகுதி வரையான பகுதிகளில் இரு நாட்களாக செயலிழந்த மின்குமிழ்கள் அகற்றப்பட்டு மாற்றப்பட்டு அப்பகுதிகள் ஒளியூட்டப்பட்டன.
இச்செயற்பாடு காரணமாக இரவு வேளையில் பயணம் செய்யும் மக்கள் அச்சமின்றி பயணங்களை மேற்கொண்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.கல்முனை மாநகர பொது வசதி பிரிவு பொறுப்பதிகாரி ஏ.அமீர் மேற்பார்வையாளர் எம்.எம். பயிஸ் ஆகியோரின் கண்காணிப்பில் இச்செயற்பாடுகள் இரவு பகலாக மேற்குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.