இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக கொலிங்வுட்!!
கரீபியனில் எதிர்வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் சுற்றுப் பயணத்துக்கான இங்கிலாந்து தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக போல் கொலிங்வுட் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுடனான ஆஷஸ் தொடரை தொடர்ந்து, தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சில்வர்வுட் நீக்கப்பட்டதை அடுத்து, கொலிங்வுட் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் இங்கிலாந்து சகலதுறை வீரரான கொலிங்வுட் சென்ற மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கான இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார், அவரின் பயிற்சியின் கீழ் இங்கிலாந்து 5 ரி-20 போட்டிகளில் விளையாடியது.
இந் நிலையில் கரீபியன் சுற்று பயணத்திற்கான டெஸ்ட் அணியை வழிநடத்துவதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன் என்று கொலிங்வுட் கூறியுள்ளார்.
கொலிங்வுட் 68 டெஸ்ட், 197 ஒருநாள் மற்றும் 36 ரி-20 போட்டிகளில் இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், மேலும் மூன்று வடிவங்களிலும் சேர்த்து 10,000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளார்.
பந்து வீச்சிலும் ஒரு நடுத்தர வேகப்பந்து வீச்சளராக சிறந்து விளங்கிய அவர், சர்வதேச அரங்கில் 144 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.