இளையோர் உலக கிண்ணம்!! -5 ஆவது முறை சம்பியனானது இந்தியா-
இளையோர் உலக கோப்பை இறுதி போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.
14 ஆவது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான
இளையோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடந்து. இதில் ஆன்டிகுவாவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடின.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜேக்கப் 2 ஓட்டத்துடனும், அணித் தலைவர் டாம் பிரஸ்ட் ஓட்டம் ஏதும் ஆட்டமிழந்தனர். ஜேம்ஸ் ரீவ் ஒருபுறம் போராட, மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து ஜேம்ஸ் ரீவுடன், ஜேம்ஸ் சேல்ஸ் கைக்கோர்த்தார். இருவரும் நிதானமாக விளையாடி ஓட்டங்களை திரட்டினர். ஜேம்ஸ் ரீவ் 95 ஓட்டங்களில் வெளியேறினார். இறுதியில் இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் 189 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ராஜ்பவா 5 விக்கெட்டுகளையும், ரவிக்குமார் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்பின் 190 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. எனினும், தொடக்க வீரரான ரகுவன்ஷி ஓட்டம் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அவருடன் விளையாடிய மற்றொரு தொடக்க வீரரான ஹர்னூர் சிங் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து விளையாடிய ஷேக் ரஷீத் அரை சதம் (50) விளாசினார். அணித்தலைவர் யாஷ் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். ராஜ் பாவா (35), கவுசல் (1) ஓட்டங்களுடன் வெளியேறினர். எனினும் நிஷாந்த் 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு போராடினார். தினேஷ் (13) ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்திய அணி 47.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ஓட்டங்களை சேர்த்து வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றுள்ளது. 4 முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், இந்த வெற்றியால் 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்து உள்ளது.