ஓய்வை அறிவித்தார் சுரங்க லக்மல்!!
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மல், இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
34 வயதான அவர் 5 டெஸ்ட் போட்டிகளில் தலைவராக இருந்து இலங்கை அணியை வழிநடத்தியும் உள்ளார். அணிக்காக 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 168 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
36.28 விக்கெட் வீழ்த்தும் சராசரியைக் கொண்ட சுரங்க லக்மல, தனது டெஸ்ட் வாழ்க்கையில் 4 தடவைகள் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 86 ஒருநாள் மற்றும் 11 ரி-20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் முறையே 109 மற்றும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேநேரம் அவர் டெஸ்டில் 928 ஓட்டங்களையும், ஒருநாள் போட்டிகளில் 244 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.
ஓய்வு குறித்து அறிவித்த அவர் தகவல் தெரிவிக்கையில்:-
தாய்நாட்டை நம்புவதற்கும் மரியாதை செய்வதற்கும் எனக்கு வாய்ப்பளித்த இலங்கை கிரிக்கெட்டுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அதேநேரம், எனது தொழில் வாழ்க்கைக்கும் எனது தனிப்பட்ட வளர்ச்சிக்கும் இலங்கை கிரிக்கெட் கணிசமான பங்களிப்பை செய்துள்ளது என கூறியுள்ளார்.
2009 முதல் 2022 வரை இலங்கை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் சுரங்கா லக்மலின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா, அவரது பங்களிப்பு இலங்கை கிரிக்கெட்டுக்கு என்றும் மறக்க முடியாத நினைவாக அமையும் என்றார்.