SuperTopAds

தென்கிழக்கு பல்கலைக்கழக 14ஆவது பொது பட்டமளிப்பு தொடர்பில் ஊடக அறிக்கை வெளியீடு

ஆசிரியர் - Editor III
தென்கிழக்கு பல்கலைக்கழக 14ஆவது பொது பட்டமளிப்பு தொடர்பில் ஊடக அறிக்கை வெளியீடு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2022ஆம் ஆண்டுக்கான 14ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, எதிர்வரும் திங்கட்கிழமை (07)  முதல் வியாழக்கிழமை (10) வரை பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

பட்டமளிப்பு தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு, பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “இப்பட்டமளிப்பு விழா 08 அமர்வுகளாக நடைபெறவுள்ளதுடன், இதில் மொத்தமாக 2,621 பேர் பட்டங்களை பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

07ஆம் திகதி முதலாவது அமர்வில் பிரயோக விஞ்ஞானம் மற்றும் பொறியியல் ஆகிய பீடங்களைச் சேர்ந்த 475 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

இரண்டாவது, மூன்றாவது அமர்வில் கலை கலாசார பீடத்தினைச் சேர்ந்த 567 மாணவர்களும், நான்காவது, ஐந்தாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தினைச் சேர்ந்த 642 மாணவர்களும் தமது பட்டங்களை பெறவுள்ளதாக தெரிவித்தார்.

ஆறாவது, ஏழாவது அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தைச் சேர்ந்த 625 மாணவர்களும், எட்டாவது அமர்வில் கலை, கலாசார பீட மற்றும் முகாமைத்துவ வர்த்தக பீடங்களின் 312 வெளிவாரி மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை வியாபார நிர்வாக முதுமானிப் பட்டங்களை 23 பேரும், முகாமைத்துவத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா பட்டங்களை 02 பேரும், 04 பேர் முது தத்துவமானி பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் கூறினார்.