மலிங்காவுக்கு கிரிக்கெட் சபையின் அறிவிப்பு
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, தேசிய அணிக்குள் உள்வாங்கப்படட வேண்டுமானல் இன்று ஆரம்பமாகியுள்ள உள்ளூர் ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுக்கான லசித் மாலிங்க, தேசிய அணியில் இடம் கிடைக்காமல் தடுமாறி வருகின்றார்.
இதனால் தனது பந்து வீச்சை நிரூபிப்பதாகவும், நடைபெறவுள்ள தென்னாபிரிக்க தொடரில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் பகிரங்கமாகவும் மாலிங்க தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று ஆரம்பமாகியுள்ள உள்ளூர் ஒருநாள் தொடரில் மாலிங்க அவரது திறமையை நிரூபிப்பதன் மூலமே அவர் அணியில் இணைய முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
எனினும் மாலிங்க ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயற்பட்டு வருகின்றார். ஐ.பி.எல். போட்டிகள் இம்மாத இறுதியிலேயே முடிவடைகின்றன.
இதனால் மாலிங்க இலங்கை வருவதில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாலிங்க தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால,
“தேர்வுக்குழுவினர் மாலிங்க இலங்கை வந்து போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என விரும்புகின்றனர். நாம் இங்கு ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 தொடர்களை ஏற்பாடு செய்துள்ளோம். அடுத்து நடைபெறவுள்ள தென்னாபிரிக்க தொடர் மற்றும் ஆசிய கிண்ணம் என்பவற்றுக்கான அணி வீரர்கள் தேர்வுகள் இடம்பெறவுள்ளன. உள்ளூர் தொடரில் சிறப்பாக செயற்படும் வீரர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் வழங்கப்படும். லசித் மாலிங்க உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டால் தேர்வுக்குழு மாலிங்கவை அணியில் இணைக்கும்” என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் மாலிங்க தேசிய அணியில் இடத்தை தக்கவைப்பதற்கு இம்மாதம் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது அவசியமாகியுள்ளது.