SuperTopAds

கொரோனா தடுப்பு தவிர்ப்பு நடவடிக்கைகளில் எமது நாடு உலக அளவில் முன்னிலையில் நிற்கின்றது -வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸ்

ஆசிரியர் - Editor III
கொரோனா தடுப்பு தவிர்ப்பு நடவடிக்கைகளில் எமது நாடு உலக அளவில் முன்னிலையில் நிற்கின்றது -வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸ்

கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றபோது பொதுமக்கள் தவறாமல் ஒத்துழைக்க வேண்டும். எமது மக்கள் ஒத்துழைக்கின்றபோது மீண்டும் எமது பிராந்தியம் கொரோனா தடுப்பு, ஒழிப்பு நடவடிக்கைகளில் வெற்றி கொடி நாட்ட முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸ் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் தேசிய கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் பணியின் ஒரு வருட பூர்த்தி நாள் நிகழ்வு சனிக்கிழமை (29) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் தேசிய கொடியேற்றலுடன் கல்முனை பிராந்தியத்தின் பிரதான நிகழ்வு வைத்திய கலாநிதி றிபாஸின் தலைமையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்

விஞ்ஞான ரீதியாக துறை சார்ந்த நிபுணர்கள் சொல்வதை நம்பி செயற்பட்டு கொரோனா தடுப்புஇ தவிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.தேசிய மட்டத்தில் மட்டும் அல்ல, சர்வதேச மட்டத்திலும் மிக சிறந்த இயங்கு திறன் நிறைந்த நிர்வாக கட்டமைப்பை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கொண்டு அற்புதமாக இயங்கி வருகின்றது.

முன்னாள் பணிப்பாளர் நண்பர் வைத்திய கலாநிதி ஜி. சுகுணன் விட்டு சென்ற இடத்தில் இருந்து தொடங்கி இன்னமும் மேலதிகமாக எனது சேவைகளை திறம்பட முன்னெடுப்பேன் என்று இத்தருணத்தில் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

கொரோனா என்றால் மக்கள் அலறி அடித்த காலம் இப்போது மாறி விட்டது. அதன் பேராபத்தை மக்கள் மறந்து விட்டனர். அதை தடுக்கவும் தவிர்க்கவும் செய்ய வேண்டிய அடிப்படை விடயங்கள் சிலவற்றைகூட செய்ய தவறுகின்றனர்

உண்மைக்கு புறம்பான தகவல்களில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.விஞ்ஞான ரீதியாக துறை சார்ந்த நிபுணர்கள் சொல்வதை நம்பி செயற்பட்டு கொரோனா தடுப்புஇ தவிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இத்தருணத்தில் வேண்டி கொள்கின்றேன்.

கொரோனா தடுப்பு தவிர்ப்பு நடவடிக்கைகளில் எமது நாடு உலக அளவில் முன்னிலையில் நிற்கின்றது. கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகளில் சர்வதேச அளவில் சாதனை படைத்து நிற்கின்றது. அதையே நாம் நினைவு கூருகின்றோம். அதற்காக ஆபத்து எம்மை விட்டு நீங்கி விட்டது என்று அர்த்தம் கிடையாது.

நாட்டில் எத்தகைய பொருளாதார. அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டாலும்கூட சுகாதார துறையினரின் சேவைகள் எந்த நிலையிலும் தவிர்க்க முடியாதவையாக உள்ளன. கொரோனா மீண்டும் மீளெழுச்சி பெற்று பரவுகின்றது. பேயாட்டம் ஆடுகின்றது.

ஒமிக்ரோன் திரிபு மிக வீரியமாக தொற்றிய வண்ணம் உள்ளது. சுகாதார துறையினர் இதை வெல்வதற்கு இன்னமும் வீரியமாக போராட வேண்டி உள்ளது. ஆனால் மக்கள் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பியது போல் நடந்து கொள்வது கவலை தருகின்றது.

கிழக்கு மாகாணத்தின் நிலை உண்மையிலேயே மிக கவலைக்கு இடமானதாக இருக்கின்றது. மிக கணிசமான எண்ணிக்கையில் தொற்றாளர்கள் கிழக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட வண்ணம் உள்ளனர் என்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

இம்மாகாணத்தில் மிக கணிசமான அளவு கொரோனா மரணங்களும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன. கல்முனை பிராந்தியத்தை பொறுத்த வரை நாம் புதிய உத்வேகத்துடன் பயணிக்க வேண்டும்.கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றபோது பொதுமக்கள் தவறாமல் ஒத்துழைக்க வேண்டும். எமது மக்கள் ஒத்துழைக்கின்றபோது மீண்டும் எமது பிராந்தியம் கொரோனா தடுப்புஇ ஒழிப்பு நடவடிக்கைகளில் வெற்றி கொடி நாட்ட முடியும் என்றார்.

இதன் போது மேலும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இலத்திரனியல் அச்சு சமூக ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் களஆய்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸ் சிநேகபூர்வமாக  கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.பி.ஏ.வாஜித், தொற்று நோய் பிரிவு வைத்தியர் டாக்டர் எம்.ஏ.சி.எம்.பஸால், திட்டமிடல் பிரிவு பொறுப்பு வைத்தியர் டாக்டர் எம்.சி. மாஹீர் ஆகியோருடன் பணிமனையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் எனப் பலரும் இணைந்திருந்தனர்.