SuperTopAds

கல்முனை பஸ் நிலைய புனரமைப்பு பணிகள் துரித கதியில் முன்னெடுப்பு

ஆசிரியர் - Editor III
கல்முனை பஸ் நிலைய புனரமைப்பு பணிகள் துரித கதியில் முன்னெடுப்பு

18.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்முனை பிரதான பஸ் தரிப்பு நிலைய வளாகத்தை புனரமைத்து, அழகுபடுத்தும் வேலைத்திட்டம் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பொறுப்பிலுள்ள நகர அபிவிருத்தி அமைச்சினால் தேசிய ரீதியில் 100 நகரங்களை செழுமைமிகு நகரங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் கல்முனை நகரமும் உள்வாங்கப்பட்டு, முதற்கட்டப் பணியாக பஸ் நிலையம் வளாகம் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில், பிரதமரின் விசேட பணிப்புரைக்கமைவாக மேற்படி திட்டத்தில் கல்முனையும் உள்வாங்கப்பட்டிருந்ததுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் எச்.எம்.எம்.ஹரிஸ் எம்.பி. மற்றும் மேயர் ஏ.எம்.றகீப் ஆகியோர் மேற்கொண்ட கலந்துரையாடலின் பிரகாரம் முதற்கட்டமாக பஸ் நிலைய வளாக புனரமைப்புக்காக மேற்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த செப்டெம்பர் 10ஆம் திகதியன்று நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.பி.எஸ்.ஜெயதிஸ்ஸவின் பங்கேற்புடன் மேயர் தலைமையில் இத்திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பஸ் நிலைய புனரமைப்பு பணிகள் காரணமாக இங்கு சேவையில் ஈடுபடுகின்ற பஸ்கள், வீதிகளிலும் ஐக்கிய சதுக்கத்திலும் தரித்து நிற்கச் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் இப்புனரமைப்பு பணிகள் இன்னும் துரிதப்படுத்தப்பட்டு மிக விரைவாக நிறைவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என மேயர் ஏ.எம்.றகீப் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.