SuperTopAds

கொ​​ரோனா தொற்றினால் கல்முனையில் மூவர் மரணம்-ஒமிக்ரோன் என சந்தேகம் -வைத்தியர் ஜி.சுகுணன்

ஆசிரியர் - Editor III
கொ​​ரோனா தொற்றினால் கல்முனையில் மூவர் மரணம்-ஒமிக்ரோன் என சந்தேகம் -வைத்தியர் ஜி.சுகுணன்

மீண்டும் தற்காலிகமாக மூடப்பட்ட இடைதங்கல் முகாம்களை திறக்க வேண்டிய நிலைமையும் ஏற்படலாம்


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புது வருடம் ஆரம்பமானதில் இருந்து மூவர்  கொரோனா தொற்று நோயின் காரணமாக இதுவரை  மரணமாகியுள்ளதாகவும் அதிகளவான மாணவர்களும் தற்போது கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  தற்காலிகமாக எமது பிராந்தியத்தில் மூடப்பட்ட கொரோனா சிகிச்சை இடைதங்கல் முகாம்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி.சுகுணன்   தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தமையால் இறுக்கமான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டதுடன் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு  கொரோனா தொற்று நோய்ப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கடந்த 2021 இறுதிக் காலப்பகுதியில் கல்முனைப் பிராந்தியம் இலங்கையில் மிகவும் பாதுகாப்பான பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும்  பொதுமக்களுக்கான தடுப்பூசி பிராந்தியத்தில் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வந்ததுடன்  பொதுமக்கள் சுகாதார சட்ட விதிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்டு வந்தன.

பொது நிகழ்வுகளில் அதிகமானவர்கள் கலந்து கொள்வதும் நீண்ட விடுமுறை காரணமாகவும்  முகக்கவசம் அணியாமல் அலட்சியம் செய்யும் நிலையும்  என்பன அவதானிக்கப்பட்டு வந்த நிலையில் கல்முனைப் பிராந்தியத்தில் தற்போது மூன்று  மரணங்கள் சம்பவித்துள்ளன.

மரணித்தவரில் ஒருவர் 58 வயதுடைய பெண்மணி சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மல்வத்தை பிரதேசத்தை சேர்ந்தவர். அடுத்தவர் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய பிரிவைச் சேர்ந்த மாதவன்  வீதியில் வசித்து வந்தவர் இவருக்கு 74 வயதாகும். இதில் மல்வத்தை பிரதேசத்தை சேர்ந்த பெண்மணி எதுவித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை. எனினும் கல்முனையை சேர்ந்தவர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர் இவர் கொவிட் நியூமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.அத்துடன் நிந்தவூர் பகுதியை சேர்ந்த 58 வயதுடைய நபரும் கடந்த திங்கட்கிழமை(17) மாரடைப்பு காரணமாக  உயிரிழந்துள்ளார்.

மேலும்  மேற்படி மூவரின் மரணத்தை தொடர்ந்து எமது பிராந்தியத்தில் ஒமிக்ரோன் கொரோனாவின் திரிவு பரவல் அடைவது குறித்து அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் ஒமிக்ரோன் பரவல்  கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நீண்ட விடுமுறைகள் மக்கள் சுகாதார நடைமுறைகளை கவனிக்காமை அத்துடன் சுகாதார துறையும் மிக இறுக்கமாக சுகாதார நடைமுறைகளை கவனிக்க முடியாத சூழ்நிலையும் இந்த பரவல் தொடர்வதற்கு காரணமாக அமைகின்றது.அத்துடன் இரு வாரங்களில் இதன் தாக்கம் அதிகரிப்பதற்கு சந்தர்ப்பமும் உள்ளது.எனவே மக்கள் முகக்கவசம் அணிதல் ஒன்றுகூடுவதை தவிர்த்தலும் நன்று.இது தவிர அதிகமாக தொற்றுக்குள்ளானவர்கள்  தடுப்பூசிகளை ஏற்ற தவறியவர்களாவர்.தற்போது அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கொரோனா 3 ஆவது தடுப்பு மருந்தினை எடுத்துக்கொள்வதில் மக்கள் அதீத அக்கறை  எடுப்பீர்களாயின் இந்நோய் தாக்கத்தில் இருந்து தங்களையும் குடும்பத்தினரையும் காப்பாற்றிக்கொள்ள முடியும்.மீண்டும் மக்களின் இயல்பு வாழ்க்கையினை ஸ்தம்பிதமடைய இடமாளிக்காமல் ஒன்றுபட்டு நாம் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

கொரோனா தொற்பு பரவல் அடைவதற்கும் சந்தரப்பம் உள்ளமையினால் இதனை தடுக்க மக்கள் எமக்கு ஒத்துழைப்புகளை தந்தால் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பி  அனைவரும் விடுதலையை பெற முடியும்.எமது பிராந்தியத்தில் அதிகளவான மாணவர்களும் தற்போது கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் மூவர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.ஏலவே கொரோனா இடைதங்கல் முகாம்களை தற்காலிகமாக மூடியுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.இவ்விடைத்தங்கல் முகாம்களில்  மருதமுனை பாலமுனை அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை என்பன உள்ளடங்குகின்றது.மீண்டும் இவ்வாறான இடைதங்கல் முகாம்களை திறக்க வேண்டிய நிலைமையும் ஏற்படலாம் எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள உயர்தர மற்றும் ஏனைய பரீட்சைக்கு முகம் கொடுக்கும் மாணவர்களுக்கு தொற்று ஏற்படுமிடத்து அட்டாளைச்சேனை ஆயுள்வேத வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை இடைத்தங்கல் முகாமில் இருந்து சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.