SuperTopAds

ராஜஸ்தானை 11 ஓட்டங்களால் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஆசிரியர் - Admin
ராஜஸ்தானை 11 ஓட்டங்களால் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 28-வது லீக்கான முதல் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சொந்தமான ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது. கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 63 ரன்கள் சேர்த்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஜாஃப்ரா ஆர்சர் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. ரகானே, ராகுல் திரிபாதி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராகுல் திரிபாதி 4 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் ஷர்மா பந்தில் க்ளீன் போல்டானார்.

அடுத்து ரகானே உடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தனர். குறிப்பாக சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் 9.4 ஓவரில் 72 ரன்னாக இருக்கும்போது சஞ்ச சாம்சன் 30 பந்தில் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் யூசுப் பதான் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் வேகத்தில் மந்தநிலை ஏற்பட்டது. அடுத்து வந்த பட்லர் 10 ரன்னில் வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் வீழந்ததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியதால் அதிரடியாக விளையாட முடியவில்லை. அந்த அணிக்கு கடைசி 5 ஓவரில் 50 ரன்கள் தேவைப்பட்டது.

16-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் 7 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி 4 ஓவரில் 43 ரன்கள் தேவைப்பட்டது. 17-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதற்கிடையே ரகானே 17-வது ஓவரின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார்.

கடைசி 3 ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை ரகானே சிக்சருக்கு தூக்கினார். ஆனால் அடுத்த ஐந்து பந்துகளையும் பிரமாண்டமாக வீசினார். இந்த ஓவரில் சிக்ஸ் சென்றாலும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடைசி இரண்டு ஓவரில் 27 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரில் லாம்ரோம் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி கூட விட்டுக்கொடுக்காமல் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் கவுல். இதனால் கடைசி ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை பாசில் தம்பி வீசினார். முதல் பந்தில் கிருஷ்ணப்பா கவுதம் பவுண்டரி அடித்தார். அடுத்த இரண்டு பந்துகளில் தலா ஒரு ரன்கள் அடித்தது ராஜஸ்தான். கடைசி 3 பந்தில் 15 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 3 ரன்கள் மட்டுமே எடுத்ததால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 11 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ரகானே 65 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.