கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நினைவு முத்திரை வெளியீடு
நானிலம் போற்றும் நாகூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர மக்களால் நடாத்திவரும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவின் 200 வது கொடியேற்று விழா, செவ்வாய்க்கிழமை (04) ஆரம்பமானது. 200 வது கொடியேற்று விழாவை சிறப்பிக்குமுகமாக 25 ரூபாய் பெறுமதியான முத்திரை ஒன்று கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் முன்றலில் வியாழக்கிழமை (06) மாலை வெளியிடப்பட்டது.
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ .அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் அழைப்பின் பேரில் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸுடன் இணைந்து மேலும் பாராளுமன்ற உறுப்பினர் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், தபால்மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன, கிழக்குமாகாண பிரதி தபால்மா அதிபர் ஜெயநந்தி திருச்செல்வம், தபால்தலை பணியக பணிப்பாளர் சாந்தகுமார மீகம, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன், கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி, கல்முனை பிரதேச முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எம். நஸீர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், அக்கரைப்பற்று அணைத்துப் பள்ளிவாசல் சம்மேளன தலைவர் எஸ்.எம். சபீஸ், உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.வை. செனவிரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சர் விமல்விர திஸாநாயக்கவின் பிரத்யோக செயலாளர் எஸ்.ஏ.டவலியூ ராஜபக்ஸ, சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி, கல்முனை தலைமையக பொலிஸ் உயரதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், அடங்களாக நாகூர் ஆண்டகை தர்ஹா சரிப் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த முத்திரை வெளியீட்டுக்கான முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை கல்முனை தொகுதி சார்பிலான திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.