SuperTopAds

சென்னை -  மும்பை இன்று பலப்பரீட்சை

ஆசிரியர் - Admin
சென்னை -  மும்பை இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 27-வது ‘லீக்’ ஆட்டம் புனேயில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் – ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி 5 வெற்றி, 1 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத், பெங்களூர் அணிகளை வீழ்த்தி இருந்தது. பஞ்சாப்பிடம் மட்டும் தோற்று இருந்தது.

மும்பை இந்தியன்சை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

ஏற்கனவே மும்பையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்ததால் சூப்பர் கிங்ஸ் நம்பிக்கையுடன் இருக்கிறது. தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

பெங்களூர் அணிக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டோனி இன்றைய போட்டியிலும் முத்திரை பதிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப்புக்கு எதிராக அதிரடியை வெளிப்படுத்தி மயிரிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஐதராபாத்துக்கு எதிராக அதைவிட அதிகமான அதிரடியை வெளிப்படுத்தி வெற்றிகரமாக முடித்தார்.

டோனி 6 ஆட்டங்களில் 209 ரன் எடுத்தார். அவரது ஸ்டிரைக்ரேட் 165.87 ஆகும். இரண்டு அரை சதம் அடித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துருப்பு சீட்டாக அம்பதி ராயுடு உள்ளார். அவர் 283 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார். அவரது ஸ்டிரைக்ரேட் 158.98 ஆகும். இரண்டு அரை சதம் அடித்துள்ளார். இது தவிர வாட்சன், பிராவோ, சாம்பில்லிங்ஸ் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

பந்துவீச்சில் ‌ஷர்துல் தாகூர் (8 விக்கெட்), தீபக் சாகர், இம்ரான் தாகீர், (தலா 6 விக்கெட்) ஆகியோர் சிறப்பாக செயல்பட கூடியவர்கள்.

புனே மைதானத்தில் சென்னை அணி இந்த சீசனில் விளையாடுவது 2-வது ஆட்டம். சொந்த மைதான மான இங்கு ஏற்கனவே ராஜஸ்தானை வீழ்த்தி இருந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. அந்த அணி 1 வெற்றி, 5 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. பெங்களூர் அணியை மட்டும் வென்று இருந்தது.

ஐதராபாத் அணியிடம் 2 முறை தோற்று இருந்தது. சென்னை, டெல்லி, ராஜஸ்தான் அணிகளிடம் தோற்றது.

சென்னை சூப்பர் கிங்சிடம் ஏற்கனவே தோற்றதற்கு பழி தீர்க்கும் ஆர்வத்துடன் மும்பை உள்ளது. ஐ.பி.எல்.லில் பரம்பரை எதிரிகளான இரு அணிகள் மோதும் ஆட்டம் என்பதால் விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.