SuperTopAds

எரிவாயு சிலிண்டர் வெடிப்புகளை தடுக்கும் சாதனம்! கல்முனை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு

ஆசிரியர் - Editor III
எரிவாயு சிலிண்டர் வெடிப்புகளை தடுக்கும் சாதனம்! கல்முனை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு

கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை மாணவர் ஒருவர் தற்போதைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியமான உபகரணம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

தற்போது நாட்டில் பல பாகங்களிலும் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்த வண்ணமே இருக்கின்றன. இதனால் மக்களின் உயிர் மற்றும் பொருள் சேதங்களுக்குள்ளாகி வருகின்றன.

இதற்குத் தீர்வாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள கமு/கமு கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி பயிலும் பாண்டிருப்பைச் சேர்ந்த பத்மநாதன் சுலோஜினிதேவி தம்பதியினரின் புதல்வன் லதேஸ் எனும் மாணவனால் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு நடைபெறாமல் தடுப்பதற்காக Gas Safe Box எனும் புதிய கண்டுபிடிப்பொன்றை உருவாக்கியுள்ளார்.

எரிவாயுவின் சிலிண்டரிலிருந்து அதிக எரிவாயு கசிவு ஏற்படும் போது, எரிவாயு அடுப்புக்கள் வெடிக்கின்றன. அடுப்பில் உள்ள Sensor மூலம் வெடிப்பதற்கு முன்னரே Gas Safty Box உள்ள System ஆனது எரிவாயு கசிவை கட்டுப்படுத்துகின்றது. இதன் மூலம், எரிவாயு அடுப்பு வெடிப்பதை தடுப்பது மட்டுமன்றி மேலதிகமாக கசிவில் உள்ள எரிவாயுவையும் மீதப்படுத்துகிறது. எனவே, இதனால் எந்தவித சேதமுமின்றி பாதுகாப்பாகவும் பயமின்றியும் மக்கள் தங்களது சமையல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் லதேஸ் குறிப்பிடுகையில்,

"இதனை இரு வாரங்களாக இரவுபகலாக முயற்சி செய்தேன். எங்கள் கிராமத்திலும் அருகிலுள்ள பல கிராமங்களிலும் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதனை நேரில் சென்று அறிக்கை ஒன்றை தயாரித்தேன். மேலும் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு செய்திகளையும் சேகரித்து ஆராய்தேன். பின்னர் இதற்கான காரணத்தை கண்டறிந்தேன். எரிவாயு வெடிப்பு சம்பவத்தினால் மக்களுடைய நாளாந்த நடவடிக்கைகள் மந்தமடைந்ததையும் மக்கள் அச்சத்துடன் இருப்பதையும் உணர்ந்து வேதனையடைந்தேன்.

இதற்காக ஒரு கண்டுபிடிப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். எனினும், அடுத்த வருடம் க.பொ.த (சா/தர) பரீட்சையும் எழுத இருப்பதால், எனது படிப்பு நேரம் தவிர்ந்து, இரவு நேரங்களில் இரு வாரமாக தூக்கமின்றி இதனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். இதற்கான பொருட்களை Online மூலம் வாங்கினேன். முதலாவதாக மூன்று Safe Box இனை உருவாக்கினேன். அது நூறு வீதம் வெற்றியளிக்கவில்லை. இறுதியாக இதற்கு முன்னர் உள்ள எரிவாயு வெடிப்பை கட்டுப்படுத்தும் திட்டங்களையும் ஆராய்ந்து பரிசோதனையில் ஈடுபட்டேன். இறுதியாக Gas Safty Box எனும் ஒரு பாதுகாப்பு அமைப்பை உருவாக்கினேன். அது சிறந்த முறையில் வேலை செய்ய தொடங்கியது. மேலும் இதிலும் சில குறைபாடுகள் உள்ளன. அதனை மேலும் சீர்செய்து சந்தைப்படுத்தல் செய்வதற்கு தீர்மானித்துள்ளேன்.

 

இதற்காக எனக்கு வழிகாட்டியாக இருந்த எனது தாய், தந்தை, மற்றும் எனது பாடசாலை அதிபர் டிலாசால் அருட் சகோதரர் S சந்தியாகு சேர் அவர்களுக்கும், எனது பாடசாலை ஆசிரியரான ரவி சேர் அவர்களுக்கும் மேலும் சில தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கிய சோ.வினோஜ்குமார் அண்ணா அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” இவ்வாறு தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

பாடசாலை அதிபர் டிலாசால் அருட் சகோதரர் S சந்தியாகு சேர் அவர்களினால் பாராட்டு விழா ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பாடசாலை அதிபர் குறிப்பிடுகையில்,

”இவ்வாறான வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் விபத்துக்கள் ஏற்படும்போது, அதற்காக உடனடித் தீர்வாக கண்டுபிடிப்புக்களைச் செய்யும் மாணவர்கள் எமது சமுதாயத்தின் பெரும் சொத்துக்கள் ஆவார்கள். இவ்மாணவர் இதற்கு முதலும் பல கண்டுபிடிப்புக்களைச் செய்துள்ளார். தனது கற்றல் நடவடிக்களைகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வருகின்றார். இவ்வாறான புத்தாக்க சிந்தனை கொண்ட மாணவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு உதவி செய்வதனால் புதிய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.

 

மேலும் நாட்டிற்கு உதவக்கூடிய பல கண்டுபிடிப்புக்களைச் செய்யக்கூடிய பல திறமைகள் அவரிடமுள்ளது. அவரைப் போன்ற மாணவர்களை இவ்வாறு விழாக்களை நடாத்தி ஊக்குவித்து வருகின்றோம். இதற்கு முன்னர் இந்தோனேசியாவில் நடைபெற்ற சர்வதேச கண்டுபிடிப்பாளர் போட்டியில் எமது பாடசாலை மாணவனான முகேஷ் என்பவர் தங்கப்பதக்கம் வென்றார்.” இவ்வாறு தனது உரையில் குறிப்பிட்டார்.

மேலும், கண்டுபிடிப்புக்கான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை வழங்கிவரும் யாழ். பல்கலைக்கழக மாணவனும் இளம் கண்டுபிடிப்பாளருமான சோ.வினோஜ்குமார் அவர்களினால் இம்மாணவனின் கண்டுபிடிப்புக்கான ஆக்கவுரிமைப் பத்திரம் எடுப்பதற்கு நிதி உதவியையும் வழங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.