SuperTopAds

திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கிச் சூடு சம்பவம்-பலியானோர் எண்ணிக்கை 04 ஆக உயர்வு: தாக்குதல் நடத்தியவர் சரணடைவு

ஆசிரியர் - Editor III
திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கிச் சூடு சம்பவம்-பலியானோர் எண்ணிக்கை 04 ஆக உயர்வு: தாக்குதல் நடத்தியவர் சரணடைவு

பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நான்கு  பொலிசார் உயிரிழந்ததுடன்  பலர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை(24) இரவு  இடம்பெற்றுள்ளதுடன் குறித்த  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த   சார்ஜன் தரத்திலான ஒருவரே இத்துப்பாக்கி   துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினமன்று  திருக்கோவில்  பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் அங்கு  கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் கையில் இருந்த ஆயுதத்தை பறித்து கொண்டு நிலையத்தில் வைத்து  நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர்   மீது திடீரென சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திவிட்டு வாகனம் ஒன்றில்  தப்பி சென்ற நிலையில் அதிகாலை மொனராகல மாவட்டத்திலுள்ள   அத்திமலை பொலிஸ் நிலையத்தில் யிலுள்ள ரி56 துப்பாக்கிகள் இரண்டு மற்றும் ரவைக் கூடுகள் சகிதம்   சரணடைந்துள்ளார்.

இதன் போது 04 பொலிஸார்  உயிரிழந்துள்ளதோடு  மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவத்தில் துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட  பொலிஸ் சார்ஜன்ட்   ரி 56 ரக துப்பாக்கியை பயன்படுத்தியே மேற்படி சூட்டினை மேற்கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் மரணமடைந்துள்ளவர்களின் சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் திருக்கோவில்  பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி உட்பட பல பொலிசார் காயமடைந்த நிலையில் அனைவரும் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில்   போலீஸ் உத்தியோகத்தர்களான பிரபாத்த , நவீணன் ,மற்றும்  சாரதி  துஷார ஆகியோர் உயிரிழந்தனர்.இச்சம்பவத்தில் காயமடைந்துள்ள திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெஹிகம உட்பட இரு பொலிஸார் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதில்  காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஒலுவில் பகுதியை சேர்ந்த  காதர் எனும் போலீஸ் உத்தியோகத்தர்  அதிகாலை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பலனளிக்காமையினால்  உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

 குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் இராணுவத்தினர்  மற்றும் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 நடந்தது என்ன ?

திருக்கோவில் போலீஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றி வந்த சார்ஜன்ட் தரத்திலுள்ள குமார எனும் போலீஸ் உத்தியோகத்தரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதுடன் இரவு சம்பவம் நடந்தபோது போலீஸ் நிலையத்தில்   கடமையில் இருந்தவர்களை  இவ்வாறு சந்தேக நபர் சுட்டுத்தள்ளியதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில்  நிலையப் பொறுப்பதிகாரி  சம்பவ இடத்திற்கு  தனது ஜீப் வண்டியில் போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்தபோது  சந்தேக நபரான சார்ஜனட் அவர்  மீதும் தாக்குதல் நடத்தியதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம்   தொடர்பில் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் அறிவுறுத்தலில் சிறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அம்பாறை பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட  பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் உயரதிகாரி  ஒருவரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றது.குறித்த சம்பவத்தில்  ஒரு சார்ஜென்ட் இரண்டு கான்ஸ்டபிள்கள் மற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகியோர் இறந்தவர்களில் உள்ளடங்குகின்றனர்.