மதுபான விடுதியின் பாதாள அறையிலிருந்து 17 நடன பெண்கள் மீட்பு!!
மும்பையில் இயங்கிவரும் மதுபான விடுதியொன்றின் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டு வைத்திருந்த 17 நடன மாதர்கள் பொலிஸாரினால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் ‘டான்ஸ் பார்கள்’ என கூறப்படும் நடன மாதர்களுடன் கூடிய மதுபான விடுதிகளுக்கு 2005 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
அவற்றில் ஆபாச செயல்கள் நடைபெற்றுவந்ததால் இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியது. உயர்நீதிமன்றின் உத்தரவு அமுலில் இருந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன் மாநிலத்தில் மீண்டும் டான்ஸ் பார்களை நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டன.
இந்தநிலையில், மும்மை, அந்தேரி பகுதியில் உள்ள மதுபான விடுதியொன்றில் கட்டுப்பாடுகளை மீறி அழகிகள் நடனம் மற்றும் சட்டவிரோத செயல்கள் இடம்பெற்றுவருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, இடம்பெற்ற சோதனையின்போது, நடன மாதுக்கள் அவ்விடத்தில் இருந்திருக்கவில்லை. இந்தநிலையில் மறுநாள் அதிகாலை மீண்டும் அவ்விடத்துக்கு சென்ற பொலிஸார் குறித்த மதுபான விடுதியை மீண்டும் சோதனையிட்டுள்ளனர்.
அதன்போது, கண்ணாடியொன்றுக்கு பின்புறம் இருந்த சிறிய கதவு வழியாக இரகசிய பாதாள அறைஅயான்றுக்கு சென்றபோது அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 17 நடன மாதர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விடுதியின் முகாமையாளர், காசாளர் மற்றும் 3 ஊழியர்களை கைது செய்ததுடன் மதுபான விடுதிக்கும் முத்திரையிட்டுள்ளனர்.