சுன்னாகம் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் செய்த நல்ல காரியம்
சுன்னாகம் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டமும், மாணவர்களுக்கான கெளரவிப்பு மற்றும் உதவி வழங்கல் நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை(22) முற்பகல் சுன்னாகம் வலி.தெற்குப் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
சங்கத்தின் சுன்னாகம் கிளைத் தலைவர் சிவசுப்பிரமணியம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வலி.தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் க.தர்சன் பிரதம விருந்தினராகவும், யாழ்.மாவட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத் தலைவர் இ. விஜயராஜா, செயலாளர் சி.கிரிதரன், சுன்னாகம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த பி.மயூரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் இந்த வருடம் சேவையிலிருந்த போது காலமான சங்கத்தின் சுன்னாகம் கிளை அங்கத்தவர்களான கோண்டாவில் உப்புமடத்தைச் சேர்ந்த கந்தப்பிள்ளை அழகுராஜா மற்றும் தாவடிப் பகுதியைச் சேர்ந்த இராசையா செல்வராஜா ஆகியோர் சார்பாக அவரது குடும்பத்தினருக்கு பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அண்மையில் வெளியான க.பொ. த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த முச்சக்கர வண்டிச் சாரதிகளின் பிள்ளைகளான மாணவ, மாணவிகள் ஐவர், மற்றும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவனொருவனிற்குப் புதிய கணக்கு ஆரம்பிக்கப்பட்ட வங்கிப் புத்தகம், பரிசில் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை, மேறப்டி சங்கம் இவ்வருடம் முதல் தடவையாகப் பல்வேறு உதவிகளையும், கெளரவிப்புக்களையும் முன்னெடுத்துள்ளமையைப் பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.