SuperTopAds

எல்.பி.எல் ரி-20 தொடர்!! -அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்னா கிங்ஸ்-

ஆசிரியர் - Editor II
எல்.பி.எல் ரி-20 தொடர்!! -அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்னா கிங்ஸ்-

எல்.பி.எல் தொடரில் நேற்றிரவு நடந்த போட்டியில் தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் அணியை 7 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ஜப்னா கிங்ஸ் அடுத்த சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.

2021 லங்கா பிரீமியர் லீக் ரி-20 கிரிக்கெட் தொடரின் 14 ஆவது போட்டி நேற்றிரவு கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தல் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ், தசூன் சானக்க தலைமையிலான தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஜப்னா கிங்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை தம்புள்ளை அணிக்கு வழங்கியது.

எனினும் ஜப்னா அணியினரின் சுழல் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாத அவர்களினால் 14.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 69 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.

எல்.பி.எல் வரலாற்றில் ஒரு அணி எடுத்த குறைந்த ஓட்ட எண்ணிக்கை இது அமைந்தது. ஜப்னா அணி சார்பில் பந்து வீச்சில் அசத்திய சதுரங்க டிசில்வா 4 ஓவர்களில் 16 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அவர் தவிர மகேஷ் தீக்ஷன 3 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க மற்றும் அசேன் பண்டார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்கள். 70 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கினை துரத்திய ஜப்னா கிங்ஸ், 7 விக்கெட்டுகளும், 64 பந்துகளும் மீதமிருந்த நிலையில் 71 ஓட்டங்களை பெற்றி இலக்கை எட்டியது. 

வெற்றி இலக்கினை துரத்தும்போது ஜப்னா சார்பில் ஆரம்ப வீரராக களமிறங்கிய உபுல் தரங்க 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும், அதன் பின்னர் களமிறங்கிய வனிந்து ஹசரங்க அவிஷ்க பெர்ணாடோவுடன் இணைந்து அதிரடி காட்டினார்.

அணியின் பெறுமதிமிக்க வீரரான வனிந்து ஹசரங்க, இதுவரை ஆடிய ஆட்டங்களில் ஓட்டங்களை குவிக்க தவறிய நிலையில் நேற்று செவ்வாய்க்கிமை கிடைத்த வாய்ப்பினை கச்சிதமாக பயன்படுத்தி 18 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக 37 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த டாம் கோஹ்லர்-காட்மோர் இம்ரான் தாஹிரின் பந்து வீச்சில் எதுவித ஓட்டங்களையும் பெறாது போல்ட் ஆனார்.

எனினும் 4 ஆவது விக்கெட்டுக்காக அவிஷ்க பெர்னாண்டோ - அசேன் பண்டார ஜோடி சேர்ந்து தடுப்பெடுத்தாட 9.2 ஓவர்களில் 71 ஓட்டங்களை பெற்று, தொடரில் 5 ஆவது வெற்றியை பதிவு செய்தது ஜப்பான கிங்ஸ். போட்டியின் ஆட்ட நாயகன் விருது சதுரங்க டிசில்வாவுக்கு வழங்கப்பட்டது.