புதிய பொலிஸ் உபநிலையம் கோளாவில் நாவற்காடு பிரதேசத்தில் திறந்து வைப்பு
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கோளாவில் நாவற்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸ் உபநிலைய திறப்பு விழாவில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் எல்.கே.டபிள்யூ.கமல் சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிலையத்தை திங்கட்கிழமை(29) மாலை திறந்து வைத்தார்.
குறித்த பொலிஸ் நிலையம் அமைவதற்கான பொருத்தமான இடத்தினை தெரிவு செய்து தருமாறு பொலிஸ் தரப்பினரால் பிரதேச செயலாளரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் பொதுமக்கள் நன்மை கருதி குறித்த இடத்தை வழங்கி இருந்தார்.
இந்நிலையில் அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் புதிய பொலிஸ் நிலைய பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததுடன் நாடாவை வெட்டியும் திறந்து வைத்தார்.
இதன் பின்னராக புதிய பொலிஸ் நிலையத்தின் குறிப்பேட்டில் கையொப்பத்தை பதிவு செய்த அவர் இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
இதன்போது அங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண பொலிஸ் மா அதிபர் குறித்த பொலிஸ் நிலையம் அமைவதற்கு முழுப்பங்களிப்பையும் வழங்கிய பிரதேச செயலாளருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் உபநிலையமாக திறக்கப்பட்டுள்ள குறித்த பொலிஸ் நிலையத்தின் அமைவிடம் மற்றும் பொதுமக்கள் தேவை கருதி மிக விரைவாக நிரந்த பொலிஸ் நிலையமாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதன் பின்னர் இடம்பெற்ற மரநடுகை நிகழ்விலும் கலந்து கொண்டு மரக்கன்றை நாட்டி வைத்தார்.
நிகழ்வில்; அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.வை.செனவரட்ண, அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டீ.ஜே.ரத்னாயக்க அக்கரைப்பற்று பொலிஸ் நிலை பொறுப்பதிகாரி பண்டார விஜயதுங்க நிலையப்பொறுப்பதிகாரி ஜெயசீலன் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள்,ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன், பிரதேச செயலக உத்தியோகத்தர் சமய பெரியார்கள் என பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழ் இருந்த ஆலையடிவேம்பு பிரதேசத்துக்கு தனி பொலிஸ் நிலயம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.