கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் கொடியேற்று விழாவினை வர்த்தமானப் பத்திரிகையில் அறிவித்தல் விடுப்பதற்கு தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூர் நடவடிக்கை.
கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் கொடியேற்று விழாவினை வர்த்தமானப் பத்திரிகையில் அறிவித்தல் விடுக்குமாறு தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூர் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலியை சந்தித்து வேண்டுகோள் விடுத்ததுடன் இது தொடர்பான ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வும் கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று திங்ட்கிழமை (29) நடைபெற்றது.
கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் வருடா வருடம் நடைபெற்று வரும் புனித கொடியேற்று விழாவானது ஒழுங்குவிதிகளுடன் 1963 ஆம் ஆண்டு அரசாங்க வர்த்தமானப் பத்திரிகையில் அறிவிப்பு செய்யப்பட்ட அரச அங்கிகாரம் வழங்கப்பட்ட விழா என்பதனை பிரதேச செயலாளரின் கவனத்திற்கு தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூர் தெரியப்படுத்தினார்.
மேலும் நானிலம் போற்றும் நாகூர் நாயகம் கருணைக்கடல் குத்புல் அக்தாப் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அவர்களின் நினைவாக வருடா வருடம் நடைபெற்று வரும் புனித கொடியேற்று விழாவின் 200ம் வருட கொடியேற்று விழா எதிர்வரும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்ப பகுதியில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் நடைபெறவும் உள்ளது. எமது நாட்டின் பல பாகங்களில் உள்ள பல்லின மக்கள் வருகை தரும் இன நல்லுறவின் அடையாளமாக திகழும் இப் புனித தளமானது நாட்டின் பாரம்பரிய கலாசார சர்வதேச உறவுகளிலும் செல்வாக்கு செலுத்தியும் வருகின்றது.
கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் நடைபெற்று வரும் புனித கொடியேற்று விழாவானது அரச வர்த்தமானப் பத்திரிகையில் வருடாந்தம் அறிவிப்பு செய்யப்பட வேண்டியிருந்தும் அது பல வருடங்களாக நிறைவேறாமை கவலையளிப்பதுடன் எதிர்வரும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்ப பகுதியில் நடைபெற இருக்கும் 200ம் வருட புனித கொடியேற்று விழாவில் இருந்து தொடர்சியாக வருடாந்தம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகையில் அறிவிப்பு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தனது வேண்டுகோள் கடிதத்தினையும் மற்றும் கொடியேற்று விழாவினை வர்த்தமானப் பத்திரிகையில் அறிவித்தல் விடுப்பதற்கான உரிய அரச நிறுவனத்தினால் சான்றுப்படுத்தப்பட்ட ஆவணங்களையும் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலியிடம் தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூர் கையளித்தார்.
கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் கொடியேற்று விழாவினை வர்த்தமானப் பத்திரிகையில் அறிவிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூரிடம் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி உறுதியளித்தார்.