வாங்கிய கடனை செலுத்தவில்லை!! -உகாண்டா விமான நிலைத்தை கைப்பற்றப்போகும் சீனா-

ஆசிரியர் - Editor II
வாங்கிய கடனை செலுத்தவில்லை!! -உகாண்டா விமான நிலைத்தை கைப்பற்றப்போகும் சீனா-

உகாண்டா அரசாங்கம் சீனாவிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால் அந்நாட்டில் ஒள்ள ஒரே ஒரு சர்வதேச விமான நிலையத்தை சீனா கையகப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆப்பிரிக்க செய்தி நிறுவனங்கள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளன.

எனினும , ஆப்பிரிக்க சிவில் விமான சேவை ஆணையம் மற்றும் சீன அரசு இரு தரப்பும் இந்தச் செய்திகளை மறுத்துள்ளன.

ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள மிகவும் ஏழ்மையான நாடான உகாண்டா, சீனாவின் எக்ஸிம் பொதுத்துறை வங்கியிடம் 2015 ஆம் ஆண்டு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றது. 

கடனுக்கு 2 சதவீதம் வட்டி. 20 ஆண்டில் திருப்பி செலுத்த வேண்டும். 7 ஆண்டுகள் கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என்று கடன் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. 

அந்நாட்டில் உள்ள ஒரே ஒரு சர்வதேச விமான நிலையமான எண்டெபெ விமான நிலையத்தை மேம்படுத்தவே அந்நாட்டு அரசு இந்த கடனை வாங்கியது. ஆனால் கடனை திருப்பி செலுத்த தவறினால், எண்டெபெ விமான நிலையம் உட்பட சில அரசு சொத்துக்கள் அடமானமாக பெறப்படும் என கடுமையான விதிமுறையை சீனா வகுத்துள்ளது.

அதுமட்டுமன்றி எந்த சர்வதேச பாதுகாப்பும் இல்லாமல் விமான நிலையத்தை ஒப்படைக்க வேண்டுமெனவும் கடன் விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் உகாண்டா எந்த சர்வதேச நாட்டின் உதவியையும் நாட முடியாது எனவும் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது ஒரேயொரு விமான நிலையத்தை சீனாவிடம் இழந்துவிடாமல் தவிர்க்கும் நோக்குடன் உகாண்டா சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தனது குழுவையும் உகாண்டா அரசு பீஜிங் அனுப்பியது.

ஆனால் சீன அதிகாரிகள் உகாண்டாவின் கோரிக்கைக்கு இணங்கவில்லை. இதனால் உகாண்டா குழு தோல்வியுடன் நாடு திரும்பி உள்ளது. இதனால் அந்நாடு தனது ஒரே சர்வதேச விமான நிலையத்தையும் சீனாவிடம் இழக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக தென்னாபிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இந்த கடன் ஒப்பந்தத்தில் தவறு செய்து விட்டதாக அந்நாட்டு நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பும் கோரி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு