பொது வைத்திய நிபுணரின் சேவை சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு விரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் - வைத்தியகலாநிதி ஜி. சுகுணன்

ஆசிரியர் - Editor III
பொது வைத்திய நிபுணரின் சேவை சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு விரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் - வைத்தியகலாநிதி ஜி. சுகுணன்

எதிர்காலத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு ஒன்றை சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு ஏற்படுத்துவது தொடர்பில் சாத்தியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம்  இன்று(25) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மீளமைக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகூட திறப்பு விழா மற்றும் ஆய்வுகூட உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

மேலும் அவர் தெரிவித்ததாவது

கல்முனை பிராந்தியத்தில் சுகாதார துறையை மேம்படுத்துவதற்கு தூரநோக்குடன் திட்டமிட்ட வகையில்  நடவடிக்கைகளை  முன்னெடுத்து வருகின்றோம்.இந்நிலையில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை இந்த பிராந்தியத்தில் உள்ள ஏ தர முன்னோடி வைத்தியசாலை ஆகும்.இங்கு பல்வேறுபட்ட வள பற்றாக்குறைகள்  காணப்படுகின்றன.உலக வங்கியின் நிதி பங்களிப்புடன் ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் இவ் வைத்தியசாலையை உள்வாங்கி பலதரப்பட்ட  பௌதீக வள அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் அடுத்த ஆண்டு முதல் கல்முனைப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து பிரதேச வைத்தியசாலைகளுக்கும் தனியார் பாதுகாப்பு சேவையையும் சுத்திகரிப்பு சேவையையும்   வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்

கல்முனை பிராந்தியத்திற்கு புதிகாக நோயாளர் காவு வண்டி கிடைக்கின்ற போது சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதை உறுதியாக தெரிவிப்பதோடு தற்போதுள்ள நோயாளர் காவு வண்டியை உடனடியாக திருத்தி அமைத்து மீண்டும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அத்துடன் வைத்தியசாலையின் சேவையில் மேலும் விரிவுபடுத்தும் வகையில் இவ் வைத்தியசாலைக்கு பொது வைத்திய நிபுணரின் சேவையின்  பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.அந்த வகையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பொது வைத்திய நிபுணர் சேவையை பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான ஒப்புதல்களை பெற்றுள்ளதோடு எதிர்காலத்தில் இது குறித்து துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இப்பிராந்தியத்தில் மாதிரி வைத்தியசாலையாக மாற்றியமைப்பதே எமது எண்ணமாகும். இதற்கு தேவையான கட்டமைப்புகளை திறமையாக வடிவமைப்பதில் நான் எப்பொழுதும் பின் நிற்கப்போவதில்லை.அந்த வகையில் இவ் வைத்தியசாலையை முன்னணி மாதிரி வைத்தியசாலையாக திறம்பட கட்டியெழுப்புவதில் எமது பிராந்திய பணிமனையின் பிரதிப் பணிப்பாளர்  திட்டமிடல் வைத்திய அதிகாரி உட்பட அத்தனை உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்போடு எண்ணம் கொண்டுள்ளார்கள் எனத் தெரிவித்தார்

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம். எச் .கே. சனூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ,கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம் பி ஏ.வாஜித், வருகைதரு விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஐ. எல் மாஹில்,கல்முனை பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம். சி. எம் .மாஹிர், உயிரியல் வாயு பொறியியலாளர் ஆர் .ரவிச்சந்திரன்,  தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் பி .எம். நசுறுடீன், வைத்தியசாலையின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ. புஹாது உட்பட வைத்திய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்  பலரும் கலந்து கொண்டனர்

Radio