குறிஞ்சாக்கேணியில் நடந்தது கொலை..! சம்மந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர், அரசு திட்டவட்டம்..
திருகோணமலை - குறிஞ்சாக்கேணியில் நடந்தது ஒரு கொலை என கூறியிருக்கும் ஆழுங்கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். என கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி, பிரதமரின் அமைச்சுக்களின் செலவீனத் தலைப்புக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில், கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்தும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.இந்த அசம்பாவிதத்தையும் எமது தலையில் சுமத்தவே இவர்கள் முயற்சிக்கின்றனர். இந்தப் பாலத்துக்கு அடிக்கல் நாட்டியது நல்லாட்சியாகும். மதிப்பீடு செய்யாது, கேள்விமனுக் கோரல் விடாது அடிக்கல் நாட்டினர்.
நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் மதிப்பீடு செய்து, கேள்விமனுக் கோரலுக்கு விடப்பட்டு பாலத்தில் ஒரு பகுதியை புனரமைக்கவும் மக்களின் பாவனைக்கு விட வெகுவிரைவில் திருத்த நடவடிக்கை எடுத்தோம். ஜூலை மாதம் இது குறித்து இம்ரான் மஹ்ரூப் எம்.பி. கேள்வியும் எழுப்பியிருந்தார்.
அதுமட்டுமல்ல பாலம் திருத்தப் பணிகள் காரணமாக மாற்று வீதியும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், மாற்று வீதி 3 கிலோமீற்றர் தூரம்.ஆகவே, மக்கள் அந்த மாற்றுப்பாதையை பாவிக்க விரும்பவில்லை. அதேபோல் படகு சேவையும் நகர சபை மூலமாகவே இயங்கியுள்ளது.
கிண்ணியா நகர சபையில் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தி அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் ஆட்சி அமைத்துள்ளது. அவர்கள்தான் படகு சேவைக்கும் அனுமதி வழங்கியுள்ளனர். ஆகவே, எம்மீது குற்றம் சுமத்த வேண்டாம்.
அதேபோல் படகு சேவையில் சிறுவர்களை அழைத்து செல்லும் வேளையில் உயிர் பாதுகாப்பு கவசங்களைப் பயன்படுத்தவில்லை. இது சட்டவிரோதமான செயற்பாடு. ஆகவே, நாட்டின் சட்டத்துக்கமைய இது கொலை.
இதனை அரசியல் பக்கம் திருப்ப வேண்டாம். அதேபோல் எம்மீது பழி சுமத்தவும் வேண்டாம். நல்லாட்சி அரசில் இதற்கு தீர்வு வழங்க முடியவில்லை. நாம் முன்வந்து இவற்றைத் திருத்தியமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
எவ்வாறு இருப்பினும் இந்தச் செயற்பாடு கொலையாகும். யார் பேசினாலும் இழப்புக்கு ஈடு இல்லை. யார் குற்றம் செய்திருந்தாலும், அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இது திட்டமிட்ட கொலை என்பதே எமது நிலைப்பாடு என்றார்.